கொரோனா பரவலை தடுக்க நேதாஜி மார்க்கெட் கடைகளை கண்டிப்பாக இடம் மாற்ற வேண்டும். கலெக்டர் தகவல்
கொரோனா பரவலை தடுக்க நேதாஜி மார்க்கெட் கடைகளை கண்டிப்பாக இடம் மாற்றம் செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
வேலூர்
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வணிகர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேலூர் நேதாஜி மார்க்கெட் வணிகர் சங்க நிர்வாகிகள், பூ மார்க்கெட் நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-
அதிகரிக்கும் கொரோனா
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்த மாத இறுதியில் தாக்கம் குறையும். ஆனால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான படுக்கை வசதிகள் பிரச்சினையாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
வேலூரை பொறுத்தவரையில் நேதாஜி மார்க்கெட் மூலம் அதிகளவு மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அதை தடுக்கும் பொருட்டு நேதாஜி மார்க்கெட்டை கண்டிப்பாக இடமாற்றம் செய்யப்படவேண்டும். மார்க்கெட்டில் உள்ள சில்லரை காய்கறி கடைகள் மாங்காய் மண்டி மைதானத்திற்கு மாற்றப்படுகிறது. இதேபோல பூ கடைகள் ஊரீசு பள்ளி மைதானத்திற்கு மாற்றப்படுகிறது.
மார்க்கெட்டில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மொத்த வணிகம் செய்து கொள்ளலாம்.
வடமாநிலங்களில் ஏராளமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு கொத்துக், கொத்தாக இறக்கின்றனர். அவர்களை புதைக்க கூட இடுகாட்டில் இடமில்லை. மொத்தமாக வைத்து எரிக்கின்றனர். இந்த நிலைமை வேலூர் மாவட்டத்திற்கு வரக்கூடாது. அதை தடுப்பதற்காகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 50 சதவீத கடைகள் இயங்குவது போல் வேலூரில் இயங்க அனுமதிக்க முடியாது. ஏனெனில் அதிகளவிலான மக்கள் வருவதால் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும். கோயம்பேடு விவகாரத்தில் அவர்கள் பெரிய விளைவை சந்திக்க உள்ளனர். நாம் அதை தவிர்ப்பதற்காக வேலூர் மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படுகிறது.
மாங்காய் மண்டி மைதானத்திற்கு 95 கடைகள் அமைக்க ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பிறர் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வணிகர்கள் கேட்டுக் கொண்டால் கொணவட்டம் அரசுப்பள்ளி, வெங்கடேஸ்வரா பள்ளி, முஸ்லிம் பள்ளி போன்ற இடங்களில் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அபராதம்
நேதாஜி மார்க்கெட்டில் உள்ள பேன்சி ஸ்டோர் உட்பட பிற கடைகள் வழக்கமாக இயங்கலாம். ஆனால் அதற்கான குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ய வேண்டும். நேதாஜி மார்க்கெட்டில் போதிய வசதிகள் இல்லை என்பதால், வியாபாரிகளின் வசதிக்காக மொத்த வணிக கடைகள் மேல்மொணவூருக்கு மாற்றப்பட உள்ளது. மேல்மொணவூரில் கடைகள் மாற்றப்பட்ட பின்னர் மண்டிதெரு, லாங்குபஜார் போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாங்காய் மண்டி மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மார்க்கெட் நாளைமறுநாள் (அதாவது நாளை) இயங்கும்.
பொதுமக்கள் முககவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது வருவாய்த்துறை, காவல்துறை, மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் விதிப்பதை தடை செய்ய முடியாது. பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளி வகுப்பறை
கூட்டத்தில் பூ வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பேசும்போது, மார்க்கெட்டில் உள்ள பூக்கடைகளை மாற்ற வேண்டுமென்றால் அதற்கு போதிய இடவசதி வேண்டும். மேலும் பூக்கள் அனைத்தும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே விற்பனைக்காக வைத்திருக்க முடியும். எனவே எங்களுக்கு மாற்று கடைகள் அமைத்து அங்கு பூக்கள் வாடாத வகையில் தென்னை ஓலையுடன் கூடிய ஷெட் அமைக்கப்பட வேண்டும் என்றனர்.
இதற்கு பதிலளித்து பேசிய கலெக்டர், பூக்கடை அமைப்பதற்கு வேலூர் டவுன் ஹாலை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதவிர வியாபாரிகள் கேட்டுக்கொண்டால் அவர்களின் வசதிக்காக கோடையிடி குப்புசாமி பள்ளியை பயன்படுத்தலாம். பூக்கள் வாடாமல் இருக்க வகுப்பறைகளை கடைகளாக அமைத்து கொள்ளலாம் என்றார்.
Related Tags :
Next Story