எட்டயபுரம் அருகே ஆற்றில் மூழ்கி தாத்தா,பேரன் பலி
எட்டயபுரம் அருகே, தாத்தா, பேரன் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே ஆற்றில் மீன்பிடிக்க சென்ற தாத்தாவும், பேரனும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓய்வுபெற்ற கண்டக்டர்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள அச்சங்குளத்தைச் சேர்ந்தவர் சைவத்துரை (வயது 65). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
தற்போது, இவர் கிராமத்தில் விவசாய பணிகள் செய்து வந்தார். இவருடைய மகள் சுப்புலெட்சுமி. திருமணமான இவர் அதே கிராமத்தில் தனது கணவர் ராஜேந்திரன், ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வருகிறார். சுப்புலெட்சுமி மகன் மதன் (வயது 12) அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தான்.
மீன் பிடிக்கச்சென்றனர்
இதனால், தனது தாத்தா சைவத்துரையுடன் மதன் வைப்பாற்றில் மீன் பிடிக்க செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலையில் வழக்கமபோல மீன் பிடிப்பதற்காக வைப்பாற்றுக்கு தாத்தாவும், பேரனும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
ஆனால் அவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர்களும், உறவினர்களும் சைவத்துரை மற்றும் மதனை தேடி வைப்பாறு பகுதிக்கு சென்றனர். அப்போது வைப்பாற்று கரையில் இருவரும் சென்ற மோட்டார் சைக்கிள், மீன் பிடிக்க பயன்படும் தூண்டில், துணி ஆகியவை மட்டும் கிடந்தன.
தீயணைப்பு துறையினர்
பக்தத்தில் தேடிப்பார்த்தும் அவர்களை காணவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் மாசார்பட்டி போலீசார் மற்றும் விளாத்திகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
பிணங்களாக மீட்பு
நேற்று அதிகாலையில் மீண்டும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தாத்தாவும், பேரனும் பிணங்களாக மீட்கப்பட்டனர். 2 உடல்களையும் தீயணைப்பு துறையினர் கரைக்கு கொண்டு வந்தார்கள்.
அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் உடல்களை மாசார்பட்டி போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆற்றில் மூழ்கி பலி
இறந்த 2 பேருக்கும் நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. எனவே, துணியை வைத்து கரையோரத்தில் நின்று மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். நேற்று முன்தினமும் கரையோரத்தில் நின்று துணியில் மீன்பிடிக்க முயன்றபோது தவறி ஆற்றுக்குள் விழுந்தோ அல்லது ஆழமான பகுதிக்கு சென்று மீன்பிடிக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கியோ சைவத்துரை, அவரது பேரன் மதன் ஆகியோர் உயிரிழந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீன் பிடிக்கச்சென்ற தாத்தாவும், பேரனும் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story