கூடலூர் பகுதியில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்
கூடலூர் பகுதியில் பலாப்பழம் விளைச்சல் அமோகமாக உள்ளது. எனினும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் விற்பனை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
கூடலூர்
கூடலூர் பகுதியில் பலாப்பழம் விளைச்சல் அமோகமாக உள்ளது. எனினும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் விற்பனை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
பலாப்பழம் சீசன்
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சீசன் நீலகிரி மாவட்டத்தில் களைகட்டி உள்ளது. கூடலூர் பகுதியில் தேயிலை உள்ளிட்ட விவசாய தோட்டங்கள் மற்றும் வீட்டு தோட்டங்களில் பலா மரங்கள் அதிகமாக உள்ளன.
இங்கு தற்போது பலாப்பழ விளைச்சல் அமோகமாக உள்ளது. விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த பலாப்பழங்களை அறுவடை செய்து கேரளா, கர்நாடகா செல்லும் சாலையோரங்களில் விற்பனைக்காக குவித்து வைத்து உள்ளனர்.
ஆனால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பலாப்பழங்களின் விற்பனை பாதிக்கப் பட்டு உள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
போதிய விலை இல்லை
ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பலாப்பழம் சீசன் களைகட்டி விடும். கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் தொல்லையால் பலாப்பழங்களை பாதுகாக்க தனி கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இருப்பினும் விளைச்சலுக்கு ஏற்ப போதிய விலை கிடைப்பதில்லை. கோடை சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையை பொறுத்து பலாப்பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிட்டது. இதனால் பலாப்பழங்கள் மரங்களிலேயே பழுத்து வீணாகி விடுகிறது.
மேலும் பழங்களின் வாசனையை நுகரும் காட்டுயானைகள் ஊருக்குள் நுழைந்து விடுகின்றன.
நேரடி கொள்முதல்
இதை தவிர்க்க வனத்துறையினர் விவசாயிகளிடம் இருந்து பலாப்பழங் களை நேரடியாக கொள்முதல் செய்து வனப்பகுதியில் வீசினால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது குறையும்.
மேலும் விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் நியாயமான விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதை அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story