சூறாவளி காற்றுக்கு வாழைமரங்கள் நாசம்
தேனி மாவட்டம் கூடலூர் அருகே சூறாவளி காற்றுக்கு வாழைமரங்கள் விழுந்து நாசமாகின.
தேனி:
தேனி மாவட்டம் கூடலூர், பளியன்குடி, கப்பாமடை புலம், வெட்டுக்காடு, கழுதைமேடு, ஆங்கூர்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் ஒட்டுரக திசுவாழைகளை பயிர் செய்துள்ளனர்.
குறிப்பாக இந்தப் பகுதிகளில் செவ்வாழை, பூவன், நேந்தரம், ரக வாழை பயிர்கள் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது வாழைமரங்களில் தார்கள் நன்கு முற்றிய நிலையில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூர், ஆங்கூர்பாளையம் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதில் கூடலூரில் உள்ள தனியார் தோட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் நாசம் அடைந்துள்ளன.
இதேபோல் வெட்டுக்காடு, கப்பாமடை புலம் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
இதுகுறித்து தகவலறிந்த அந்த பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயலட்சுமி, முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சேதம் அடைந்த வாழைமரங்களை பார்வையிட்டனர்.
அறுவடை நேரத்தில் வாழைமரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story