மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்


மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 16 April 2021 9:09 PM IST (Updated: 16 April 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை நகரில் 2 பஸ் நிலையங்கள் உள்ளன. அதில் சென்னை, சிதம்பரம், கும்பகோணம், பூம்புகார் ஆகிய முக்கிய வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் அனைத்தும் வந்து செல்லும் பஸ் நிலையமாக காமராஜர் பஸ் நிலையம் உள்ளது. நகரின் முக்கியமான இந்த பஸ் நிலையத்தில் ஒரு நாளைக்கு 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பஸ் நிலையத்திற்குள் வந்து பயணம் செய்கின்றனர். இத்தகைய முக்கியமான பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் அகலமாக இருந்தாலும் அதில் ஒரு பகுதியில் போலீசாரின் காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையின் எதிர்ப்புற நுழைவு வாயில் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி பஸ்கள் உள்ளே நுழையும்போது பயணிகள் ஒதுங்க இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே இந்த பஸ் நிலைய நுழைவு வாயிலில் நெருக்கடியின் காரணமாக பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

அதில் பஸ் மோதி பலர் உயிரிழந்துள்ளனர். எனவே பஸ் நிலைய நுழைவு வாயில் அருகில் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தி பஸ்கள் உள்ளே நுழைவதற்கும், பயணிகள் நடந்து செல்ல வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story