எருக்கூர் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கியதாக கூறி சாலையோரம் கொட்டிய அவலம்
எருக்கூர் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கியதாக கூறி அவற்றை சாலையோரம் கொட்டி உள்ளனர்.
கொள்ளிடம்,
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மூலம் எருக்கூர் கிராமத்தில் உள்ள 3 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, மண்எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கடையின் மூலம் அந்த பகுதி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரிசி, கடந்த 6 மாத காலமாக புழுக்கள் மற்றும் வண்டுகள் நிறைந்து தரமற்றதாக உள்ளது.. வேறு வழியின்றி இந்த அரிசியை மக்கள் வாங்கி ஒவ்வொரு வீட்டிலேயும் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைத்துள்ளனர்.
சாலையோரம் கொட்டியுள்ளனர்
எருக்கூர் ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் அரிசி சமைத்து உண்பதற்கு ஏற்றதாக இல்லை. சிலர் பயனற்ற அரிசியை வாங்கி எதற்கு வீட்டில் வைக்க வேண்டும்? என நினைத்து எருக்கூர் சாலையோரம் வீணாக கொட்டி உள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த 6 மாதங்களாக எருக்கூர் ரேஷன் கடை மூலம் அனைவருக்கும் தரமற்ற அரிசியை வழங்கி வருகின்றனர். இ்ந்த அரிசியை எதுவும் செய்ய முடியவில்லை. எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலை மூலம் தான் பல்வேறு ரேஷன் கடைகளுக்கு அரிசி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தரமான அரிசி வழங்க வேண்டும்
ஆனால் எருக்கூரில் உள்ள ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டு வரும் அரிசி தான் தரமற்றதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த கிராம மக்களின் நலன் கருதி எருக்கூர் கிராம மக்களுக்கு ரேஷன் கடை மூலம் நல்ல தரமான அரிசி வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story