சங்கராபுரம் அருகே நூதன முறையில் ஜவுளிக்கடை பெண் உரிமையாளரிடம் 3 பவுன் சங்கிலி அபேஸ் முகநூல் நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு


சங்கராபுரம் அருகே நூதன முறையில் ஜவுளிக்கடை பெண் உரிமையாளரிடம் 3 பவுன் சங்கிலி அபேஸ் முகநூல் நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 16 April 2021 10:01 PM IST (Updated: 16 April 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே ஜவுளிக்கடை பெண் உரிமையாளரிடம் நூதனமுறையில் 3 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற அவரது முகநூல் நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


சங்கராபுரம்


ஜவுளிக்டை உரிமையாளர்

சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த உமைபாலன் மனைவி பாலின்ராணி(வயது 27). இவர் அதே ஊரில் சொந்தமாக ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். 
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரது முகநூல் மற்றும் வாட்ஸ்-அப் வலைதளம் மூலம் ஆண் நபர் ஒருவர் பேசி நட்பாக இருந்துள்ளார். பின்னர் அந்த ஆண் நண்பர் பாலின்ராணியை நேரில் பார்ப்பதற்காக அவரது ஜவுளிக்கடைக்கு வந்தார். 

3 பவுன் சங்கிலி

அப்போது பாலின்ராணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பற்றி விசாரித்துக்கொண்டிருந்த ஆண் நண்பர் அதை கழற்றி தாருங்கள் பார்த்து விட்டு தருகிறேன் என்று கூறினார். இவரது பேச்சை நம்பிய பாலின் ராணி தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழற்றி அவரிடம் கொடுத்தார்.  இதற்கிடையே கடைக்கு துணி எடுக்க வாடிக்கையாளர்கள் வந்ததால் பாலின் ராணியின் கவனம் வாடிக்கையாளர் பக்கம் திரும்பியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ஆண் நண்பர் அங்கிருந்து நைசாக எழுந்து வெளியே நின்ற காரில் தப்பி சென்றுவிட்டார். 

போலீசில் புகார்

வியாபாரத்தை முடித்துவிட்டு பாலின்ராணி ஆண் நண்பரை பார்த்தபோது அவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதன்பிறகே தன்னுடன் முகநூலில் நட்பாக பேசி வந்த ஆண் நண்பர் திருடன் என்பது தெரியவந்தது. பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.90 ஆயிரம் என கூறப்படுகிறது.
இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் பாலின்ராணி புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்கு பதிவுசெய்து தங்க சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

முகநூலில் ஜவுளிக்கடை பெண் உரிமையாளருடன் நட்புடன் பழகி அவரது 3 பவுன் சங்கிலியை ஆண்நண்பரே நூதனமுறையில் பறித்துச்சென்ற சம்பவம் கடுவனூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story