காட்பாடியில் காலையில் காதல் திருமணம் செய்த மாணவி இரவில் மர்மச் சாவு
காட்பாடியில் காலையில் காதல் திருமணம் செய்த பள்ளி மாணவி இரவில் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி
பள்ளி மாணவி காதல்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள பிலாசூர் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் முரளி (20). இவருக்கும், கல்யாணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முரளி யாருக்கும் தெரியாமல் கல்யாணியை வேலூரை அடுத்த காட்பாடிக்கு அழைத்து வந்தார்.
கோவிலில் திருமணம் செய்தனர்
மகள் காணாமல் போனதால் பதற்றமடைந்த அவரின் பெற்றோர் இது குறித்து போளூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் முரளி நேற்று முன்தினம் கல்யாணியை வள்ளிமலை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
மர்மச்சாவு
பின்னர் காட்பாடி கிளித்தான் பட்டறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினர். இரவு கல்யாணி வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு முரளி குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முரளி மற்றும் அவரது உறவினர்கள் கல்யாணியை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போளூரில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. மாயமான மகள் இறந்ததை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீஸ் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் காட்பாடி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி எப்படி இறந்தார்? என்பது குறித்தும் முரளியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்யாணிக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததாகவும், குளிர் பானம் குடித்ததும் அவர் மயக்கம் ஏற்பட்டு இறந்ததாக முரளி தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story