பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியது
பிளஸ்-2 பொதுத்தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று பேசப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கி இருக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 302 பள்ளிகளில் 33 ஆயிரத்து 787 பேர் பங்கேற்றனர்.
விழுப்புரம்,
பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி முதல் தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதற்கான ஆயத்தப்பணிகளில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து இருப்பதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல், சில மாநிலங்களில் நடைபெற இருந்த மாநில வாரிய பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் தமிழகத்திலும் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளார் ராஜீவ் ரஞ்சன், கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தி இருக்கிறார். ஆனால் எந்த முடிவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
செய்முறைத்தேர்வு தொடங்கியது
பொதுத்தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேற்று தொடங்கியது.
முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செய்முறைத் தேர்வுகளை நடத்த அரசுத் தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் செய்முறைத் தேர்வு நேற்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடங்கியது. அந்தவகையில் இந்த செய் முறைத் தேர்வு வருகிற 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
மாணவ-மாணவிகள் பங்கேற்பு
கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் “பிபெட்” ஆய்வக உபகரணங்களுக்கு பதிலாக, ‘பியூரெட்' அல்லது ‘டெஸ்ட் டியூப்' ஆகியவற்றை பயன்படுத்தவேண்டும் என்றும், மைக்ரோஸ்கோப்புக்கு பதிலாக வரைபடங்கள் மற்றும் புகைப்படங்களை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையிலேயே மாணவ-மாணவிகள் ஆய்வகத்தில் செய் முறைத் தேர்வில் பங்கேற்றனர்.
விழுப்புரம்-கள்ளக்குறிச்சி
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 186 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் 15,173 பேர் செய்முறை தேர்வு எழுதினர். இதற்காக மாவட்டம் முழுவதும் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஓங்கூர், சாரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 116 மேல்நிலைப்பள்ளிகளை 18 ஆயிரத்து 614 மாணவ-மாணவிகள் செய்முறை தேர்வை எழுதினார்கள். களமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்முறை தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி ஆய்வு செய்தார்.
மதிப்பெண் பட்டியல்
செய்முறைத் தேர்வில் கொரோனா பாதிப்பு காரணமாக பங்கேற்க முடியாத மாணவ-மாணவிகளுக்கு அரசுத் தேர்வுத்துறை ஏற்கனவே தெரிவித்தபடி, மற்றொரு நாளில் செய்முறைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
இவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல், முதன்மை கல்வி அலுவலகத்தில் 24-ந் தேதிக்குள், தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க உள்ளனர். முதன்மை கல்வி அலுவலர்கள் அந்த மதிப்பெண்ணை வருகிற 28-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இருக்கின்றனர். அடுத்த மாதம் 6-ந் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story