பஸ்களில் மக்கள் முக கவசம் அணிந்து பயணம் செய்வதை அதிகாரிகள் கண்காணிப்பு கூட்டநெரிசலை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்கம்
பஸ்களில் மக்கள் முக கவசம் அணிந்து பயணம் செய்கிறார்களா? என்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பஸ்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து செல்லவேண்டும். பஸ்களில் ஏறுமுன் கைகளில் கிருமிநாசினி எடுத்துக்கொள்ள வேண்டும். பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பயணிகளை நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த விதிமுறைகள் எல்லாம் பின்பற்றப்படுகிறதா? என தஞ்சை கோட்ட போக்குவரத்து கழக மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர் மகேஸ்வரன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று புதிய பஸ் நிலையத்தில் ஒவ்வொரு பஸ்சாக ஏறி சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் யாராவது வந்தால் அவர்களுக்கு ஆலோசனை சொல்லி முககவசம் அணிய வற்புறுத்தியதோடு, முககவசம் இல்லை என்றால் உடனடியாக கண்டக்டரிடம் கேட்டு வாங்கி அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும் கண்டக்டர்களிடமும் அரசு விதிமுறைகளை பின்பற்றி பயணிகளை அனுமதிக்குமாறு அறிவுறுத்தினர்.
கூடுதல் பஸ்கள்
இந்தநிலையில் தஞ்சையிலிருந்து கலெக்டர் அலுவலகம், வல்லம் வழியாக செங்கிப்பட்டி வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கும்பகோணம் கோட்ட போக்குவரத்துகழக மேலாண் இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் இது குறித்து தஞ்சை கோட்ட மேலாளர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் செந்தில்குமார் காலை நேரத்தில் புதிய பஸ் நிலையம் மற்றும் செங்கிப்பட்டி பகுதியில் ஆய்வு செய்தபோது அலுவலகம் செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் என கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து காலை 8 மணி முதல் 10 மணிக்குள் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 6 பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி நேற்று 6 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.
மாற்று ஏற்பாடு
இதேபோல் மாலை நேரத்திலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் வெளியூர்களுக்கும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story