கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: அரசு அலுவலகங்கள், உழவர் சந்தையில் கிருமிநாசினி தெளிப்பு
நெல்லையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்கள், உழவர் சந்தையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்கள், உழவர் சந்தையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகம்
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை வேகமாக பரவி வருவதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 3-வது தளத்தில் வளர்ச்சி பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதேபோன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்படும் வாக்கு எண்ணிக்கை மையமான நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீஸ் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல எல்.ஐ.சி. அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
அரசு அலுவலகங்கள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுடன் பணியாற்றிவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்கள் பணியாற்றிய நெல்லை கலெக்டர் அலுவலகம், அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி சுகாதார அதிகாரி சரோஜா உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, நடராஜன் ஆகியோர் மேற்பார்வையில், சுகாதார பணியாளர்கள் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மை பணி மேற்கொண்டனர்.
உழவர்சந்தை
கொரோனா பரவலை தடுப்பதற்காக, பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் ஆங்காங்கே தேங்கி கிடந்த கழிவுகளை சுத்தப்படுத்தி அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர். காய்கறி வாங்க வருகிறவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கண்டறியப்பட்டது.
மேலும் உழவர் சந்தையில் சுகாதார அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். உழவர் சந்தையில் உள்ள அனைத்து கடைகளிலும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
நெல்லை வண்ணார்பேட்டையில் முககவசம் அணியாமல் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஊழியருக்கு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ அபராதம் விதித்தார்.
Related Tags :
Next Story