வீடு புகுந்து 3 பவுன் நகை திருட்டு
திருத்தங்கலில் வீடு புகுந்து நகை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகாசி,
திருத்தங்கல் சேட்டன் கிணறு தெருவை சேர்ந்தவர் தேன்ராஜ் (வயது 57). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் வழக்கம்போல் வீட்டு மாடியில் படுத்து தூங்கி உள்ளார். வீட்டில் மனைவி மட்டும் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம மனிதன் வீட்டில் இருந்த பீரோவை நைசாக திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த செயின், மோதிரம், கம்மல் என மொத்தம் 3 பவுன் எடை உள்ள தங்க நகைகளை திருடி சென்றுள்ளான். காலையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தேன்ராஜ் மனைவி தனது கணவரை எழுப்பி தகவல் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து தேன்ராஜ் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருத்தங்கல் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இதை தடுக்க திருத்தங்கல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story