அந்தியூர் அருகே சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல்; பாதிப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு


அந்தியூர் அருகே  சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல்; பாதிப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு
x
தினத்தந்தி 16 April 2021 8:36 PM GMT (Updated: 16 April 2021 8:36 PM GMT)

அந்தியூர் அருகே சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.

அந்தியூர்
அந்தியூர் அருகே சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது. 
டெங்கு காய்ச்சல்
அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அப்போது அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. 
உடனே அந்த சிறுமி மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 
பாதிப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த சிறுவனும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். 
இதன்காரணமாக அந்த பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது. 
மருத்துவ முகாம்
இதைத்தொடர்ந்து எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், கிராம செவிலியர்கள் ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து உள்ளனர். அங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் போன்றவை வழங்கினர். மேலும் மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர ஆய்வில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கொசு உற்பத்தி ஆகும் இடங்கள், தண்ணீர் தொட்டிகள் போன்றவை கண்டறியப்பட்டு, அந்த இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு தரக்கூடிய நிலவேம்பு கசாயத்தையும் பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் வழங்கி வருகிறார்கள். மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் முகாம் அமைத்து தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Next Story