ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா; சிகிச்சை அளிக்க 2,700 படுக்கைகள் தயார்


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா; சிகிச்சை அளிக்க 2,700 படுக்கைகள் தயார்
x
தினத்தந்தி 16 April 2021 9:01 PM GMT (Updated: 16 April 2021 9:01 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரத்து 700 படுக்கைகள் தயாராக உள்ளன.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரத்து 700 படுக்கைகள் தயாராக உள்ளன.
கொரோனா பாதிப்பு
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்றும் ஒரே நாளில் 132 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 572 ஆக உயர்ந்தது.
இதில் 15 ஆயிரத்து 528 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 63 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தார்கள். தற்போது வரை 892 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், 152 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் போன்ற சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு கைக்கோளர் வீதி உள்பட மாநகராட்சியில் பல இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நகராட்சி ஆணையாளர்க்கு கொரோனா
பவானி நகராட்சி ஆணையாளர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் பவானி பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 2 பேரும் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 
இதேபோல் கொடுமுடி பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
2,700 படுக்கைகள்
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தற்காலிக சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 700 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிவரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 400 படுக்கைகளும், கோபிசெட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், பெருந்துறை ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் 684 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 186 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தனியார் ஆஸ்பத்திரிகள்
தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களான கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 500 படுக்கைகளும், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 150 படுக்கைகளும், அந்தியூர் ஐடியல் பள்ளிக்கூடத்தில் 1,500 படுக்கைகளும், வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் 150 படுக்கைகளும், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 150 படுக்கைகளும், செங்குந்தர் கல்லூரியில் 100 படுக்கைகளும், கூகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளும், நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளும், திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளும், சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளும், சென்னிமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளும் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
இதேபோல் லோட்டஸ் ஆஸ்பத்திரியில் 38 படுக்கைகளும், சுதா ஆஸ்பத்திரியில் 104 படுக்கைகளும், அபிராமி கிட்னி கேர் சென்டரில் 15 படுக்கைகளும், ஈரோடு பல்நோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியில் 25 படுக்கைகளும், ஈரோடு எஸ்.கே. ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளும், ஈரோடு சி.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளும் என 242 படுக்கைகள் தனியார் ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையில் உள்ளது.
தடுப்பூசி
மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 61 ஆயிரத்து 557 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 16-ந் தேதி (நேற்று) மட்டும் 2 ஆயிரத்து 889 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 15-ந் தேதி நிலவரப்படி மாவட்டத்தில் 97 ஆயிரத்து 441 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர்.அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறிஉள்ளார்.

Next Story