கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி - தானாக விழுந்து தற்கொலை செய்தது கண்காணிப்பு கேமராவில் அம்பலம்


கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி - தானாக விழுந்து தற்கொலை செய்தது கண்காணிப்பு கேமராவில் அம்பலம்
x
தினத்தந்தி 17 April 2021 5:51 AM GMT (Updated: 17 April 2021 5:51 AM GMT)

கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வாலிபரே லாரிக்கு அடியில் படுத்து தற்கொலை செய்தது தெரிந்தது.

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர், கல்யாணசெட்டி நகரைச் சேர்ந்தவர் வினோத் (வயது 25). இவர், தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை எல்லையம்மன் கோவில் தெரு சந்திப்பு அருகே எண்ணூர் விரைவு சாலையை கடந்து செல்ல முயன்றபோது கன்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்.

இதனால் பயந்துபோன டிரைவர், கன்டெய்னர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார், பலியான வினோத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பலியான வினோத், சாலை தடுப்பு சுவரை தாண்டி வந்து நிற்பதும், பின்னர் அந்த வழியாக வேகமாக வந்த கன்டெய்னர் லாரியின் நடுபகுதியில் தானாக படுத்து தற்கொலை செய்து கொண்ட காட்சிகளும் பதிவாகி இருந்தன.

இதையடுத்து இந்த வழக்கை போக்குவரத்து போலீசாரிடம் இருந்து திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story