பாரதியார்-பாரதிதாசன் இல்லங்களை நவீனப்படுத்த நடவடிக்கை; புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு


பாரதியார்-பாரதிதாசன் இல்லங்களை நவீனப்படுத்த நடவடிக்கை; புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
x
தினத்தந்தி 17 April 2021 12:01 PM GMT (Updated: 17 April 2021 12:01 PM GMT)

பாரதியார், பாரதிதாசன் இல்லங்களை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

கட்டுப்பாட்டு மையம்
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஆய்வு செய்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொற்று கண்டறியப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், சிறிய கட்டுப்பாட்டு பகுதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் (104) செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் ஆலோசனை வழங்கினார்.

காணொலி காட்சி
முன்னதாக அவர் பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் அருங்காட்சியகங்களை பார்வையிட்டார். அப்போது அருங்காட்சியகங்களின் பார்வை நேரம், பார்வையாளர்கள் விவரம் பற்றி கேட்டறிந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள், கையெழுத்து பிரதிகள், புத்தகங்களையும் அவர் பார்வையிட்டார். அப்போது கலை பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், இயக்குனர் ராகிணி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் பாரதிதாசன், பாரதியார் இல்லங்களை நவீனப்படுத்தி அவர்களது வாழ்க்கையை விவரிக்கும் காணொலி காட்சி அமைப்பது, அதிகப்படியான பள்ளி மாணவர்கள் வந்து பார்வையிடும் வகையில் அவரது நிகழ்வுகளை காட்சிப்படுத்துவது போன்றவற்றை ஆலோசித்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story