ஆரணி; அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


ஆரணி; அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 17 April 2021 12:23 PM GMT (Updated: 17 April 2021 12:23 PM GMT)

ெநல்லுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி

நெல்லுக்கு  உரிய விலை நிர்ணயம் செய்யாததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இடைத்தரகர்கள்

ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி உள்ளது. அதில் ஆரணி, இரும்பேடு, ஆவணியாபுரம், பெரிய கொழப்பலூர், மெய்யூர், அடையபுலம், சேவூர், எஸ்.வி.நகரம், மாமண்டூர் உள்பட 75-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் மகசூலான நெல், மணிலா, மிளகாய், உளுந்து ஆகிய விளை பொருட்களை நேரில் கொண்டு வந்து விற்பனை செய்வர். 

ஆனால், அங்கு வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் 20-க்கும் மேற்பட்டோர் இருப்பதாகக் கூறப்படுகிறது. விவசாயிகள் கொண்டு வரும் வேளாண் விளை பொருட்களின் தரத்தைப் பார்த்து வியாபாரிகளும், இடைத்தரகர்களும் விலை நி்ாணயம் செய்வதாகத் தெரிகிறது. 

நீண்டகால பிரச்சினை

எனினும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லின் தரத்தைப் பார்த்து வியாபாரிகளின் ஏஜென்டுகள் உரிய விலை நிர்ணயம் செய்வதில்லை என்றும், தரமான நெல்லை கொண்டு வந்தாலும் தரம் இல்லை என்றும் கூறி குறைந்த பட்ச விலையை நிர்ணயம் செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 

இது, ஒருபுறம் இருக்க வேறொரு ஊரில் இருந்து வியாபாரிகள் ஆரணிக்கு வந்து, வேளாண் விளை பொருளை வாங்க உள்ளூர் வியாபாரிகள் அனுமதிப்பதில்லை. இங்கு இருக்கும் உள்ளூர் வியாபாரிகள் கூட்டாகச் சேர்ந்து வெளி வியாபாரிகளை வரவிடாமல் தடுத்து வருகின்றனர். இது, நீண்டகாலமாக நடந்து வரும் பிரச்சினையாகும். 

திடீர் போராட்டம்

இந்த நிலையில் நேற்று  விவசாயிகளின் நெல்லுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யப்படாததால் விவசாயிகள், வியாபாரிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாகக் கூறி ஆரணி-வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

விவசாயிகளை போலீசார் சமரசம் செய்து, நெல் தரமாக இருந்தால் தான் சரியான விலையை நிர்ணயம் செய்ய முடியும், வியாபாரிகளும் நெல்லை கொள்முதல் செய்வார்கள். நெல் தரமாக இல்லையென்றால் வியாபாரிகள் கொள்முதல் செய்யமாட்டார்கள் எனக்கூறி, நிர்ணயிக்கப்பட்ட விலை சரியாக இல்லை எனக்கூறி நெல் கொள்முதல் செய்யாமல் நிறுத்திவிட்டனர்.

அதைத்தொடர்ந்து 2-வது நாளாக இன்று ஏற்கனவே குறைவாக நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்தவர்களுக்கு கூடுதல் விலையும், அதேபோல் அதிக விலை நிர்ணயம் செய்த நெல்லுக்கு மதிப்பீடு குறைத்தும் விலை நிர்ணயம் செய்ததால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சமாதானம்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சாலை மறியல் செய்ய இருந்தனர். அதற்குள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆரணி தாலுகா போலீசுக்கும், டவுன் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். 

ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், ரகு மற்றும் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

அதிகாரியை விவசாயிகள் முற்றுகையிட்டு, வியாபாரிகளுக்கு ஆதரவாக பேசுகிறீர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக பேசவில்லை எனக்கூறி கோஷம் எழுப்பினர். போலீசார், இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமாதானம் செய்தனர்.

நஷ்டத்தில் விற்க வேண்டிய சூழ்நிலை

அப்போது விவசாயிகள் கூறுகையில், நெல்லை விற்காமல் இங்கேயே வைத்து விட்டால் நெல் மூட்டைக்கு நாள் ஒன்றுக்கு கோணிப்பை வாடகையாக ரூ.8 செலுத்த வேண்டும். இதனால் நாங்கள் ெநல் மூட்டையை நஷ்டத்தில் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு காரணம் அதிகாரிகள், வியாபாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வதால் தான், எனக் குற்றம் சாட்டினர்.

அதற்கு போலீசார், வெளியூர் வியாபாரிகள் வந்து 2, 3 நாட்கள் நெல்லை வாங்குவார்கள். 3 நாட்களுக்கு பிறகு நெல்லை வாங்கவில்லை என்றால் மேலும் நஷ்டம் ஏற்படும். அதிக விலைக்கு வெளியூர் வியாபாரிகளும் வாங்க வரமாட்டார்கள். இதை, அனுசரித்து வியாபாரம் செய்யுங்கள், என்றனர். 

நேரடி நெல் கொள்முதல் நிலையம்

ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கமிட்டியில் இதேநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கினால் மட்டுமே சாத்தியமாகும் என்று விவசாயிகள் கூறினர்.

Next Story