புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் பகுதி நேர ஊரடங்கு; புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை


புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் பகுதி நேர ஊரடங்கு; புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 April 2021 12:32 PM GMT (Updated: 17 April 2021 12:32 PM GMT)

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் புதுவையில் பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்த வேண்டியது இருக்கும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்தார்.

புதுவையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

வேகம் எடுத்த தொற்று
கொரோனா தொற்று தீவிரமடைந்து இருந்த நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தநிலையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை மளமளவென சரிந்து ஒற்றை இலக்குக்கு வந்தது.ஆனால் கடந்த மார்ச் 1-ந்தேதிக்குப் பிறகு தொற்று பாதிப்பு வேகம் எடுத்தது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பல மடங்கு அதிகரித்தது. அதோடு உயிர்ப்பலியும் பதிவானது.நாடு முழுவதும் பரவியது போல் புதுவையிலும் கொரோனா 2-வது அலை உருவெடுத்து இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முகக்கவசம் அணிவதில் அலட்சியம், பொதுஇடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

பொதுமக்கள் ஆர்வம்
இந்தநிலையில் புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தீவிர நோய் பாதித்தவர்கள் என முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டது.இதையடுத்து தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு சார்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.இதன்காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தட்டுப்பாடின்றி தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது/

நடமாடும் வாகனம்
இதுமட்டுமின்றி விவசாயிகள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த வாகனத்தை கவர்னர் மாளிகை முன்பு நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர் சந்திரமவுலி, சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் மோகன்குமார், கிராமப்புற சுகாதார இயக்கக இயக்குனர் ஸ்ரீராமுலு, டாக்டர் ரமே‌‌ஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

படுக்கை வசதி

தொற்று பரவலை தடுக்க தொடர்ந்து போராடி வருகிறோம். குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்கிறோம். புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களின் நிர்வாகிகளோடு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள்.அப்பகுதிகளில் உள்ள சிறிய குறைபாடுகளை அவர்களாகவே சரிசெய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நமக்கு தேவையான படுக்கை வசதி, வென்டிலேட்டர் என அனைத்தும் போதுமான அளவில் உள்ளது.நடமாடும் தடுப்பூசி வாகனத்திலும் இந்த வசதிகள் உள்ளன. 100 பேருக்கு மேல் வேலைசெய்யும் இடங்களுக்கு சென்று இந்த வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படும். தனியார் நிறுவனங்களும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தடுப்பூசி தொழில்நுட்பம்
கொரோனாவை கட்டுப் படுத்த அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். கடைகள், மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசிகளை வெளி நாடுகளுக்கு அனுப்புவது தொடர்பாக சிலர் பேசி வருகின்றனர். அந்த தடுப்பூசிக்கான தொழில்நுட்பத்தை அவர்களிடம் இருந்து பெறுகிறோம். அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. சிலர் உடனடியாக ஊரடங்கினை அமல்படுத்துங்கள் என்று கேட்கின்றனர். டெல்லி, மராட்டியத்தில் அதை அமல்படுத்தி உள்ளனர்.

புதுவையில் இன்னும் அந்த அளவுக்கு செல்லவில்லை. கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்காவிட்டால் பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்த வேண்டியது இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story