நடிகர் விவேக் மரணத்தை கொரோனா தடுப்பூசியுடன் இணைக்க வேண்டாம்


நடிகர் விவேக் மரணத்தை கொரோனா தடுப்பூசியுடன் இணைக்க வேண்டாம்
x
தினத்தந்தி 17 April 2021 6:47 PM GMT (Updated: 17 April 2021 6:47 PM GMT)

நடிகர் விவேக் மரணத்தை கொரோனா தடுப்பூசியுடன் இணைக்க வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை, ஏப்.18-
நடிகர் விவேக் மரணத்தை கொரோனா தடுப்பூசியுடன் இணைக்க வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
விவேக் மரணத்திற்கு இரங்கல்
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் மாவட்டத்துக்கு உட்பட்ட அ.தி.மு.க.வேட்பாளர்கள்  நேற்று பார்வையிட்டனர்.
அதன்பின் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது நடிகர் விவேக் மரணம் தொடர்பாக அவர் இரங்கல் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், `சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மரணம் என்பது மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளான விஷயம். மரங்களை நடுவதில் மிகுந்த அக்கறை காட்டியவர். பல விருதுகளை பெற்றிருக்கிறார். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார். தொடர்ந்து அவரிடம் நடிகர் விவேக்கின் மரணத்திற்கு அவர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டது ஒரு காரணம் என மக்களிடம் வதந்தி பரவுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
மக்களுக்கு நம்பிக்கை தேவை
ஏற்கனவே அரசு செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இதனை தெளவுபடுத்தியிருக்கிறார். மருத்துவமனை நிர்வாகமும் தெளிவுப்படுத்தி விட்டது. ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசியால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பதை பல முறை கூறியுள்ளோம். மக்களுக்கு நம்பிக்கை என்பது அவசியம். அரசு துறை, மருந்து, மருத்துவர்கள் மீது மக்கள் நம்பிக்கை வைப்பது அவசியம். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதனை (விவேக் மரணம்) இதனுடன் இணைக்க வேண்டாம்.
மிகப்பெரிய சவால்
கொரோனா தொடர்பாக ஆய்வு பணி மேற்கொள்வதில் நான் தயாராக உள்ளேன். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் செய்யமுடியவில்லை. மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தனுடன் நான் இன்று காலை (அதாவது நேற்று) தொலைபேசியில் தமிழகத்தின் நிலையை எடுத்துக்கூறியதுடன், ரெம்டெசிவிர் மருந்து தங்கு தடையின்றி தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டேன். அனைவரும் முழுமையாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் சுகாதார கட்டமைப்புகள் வலுவாக இருப்பதால் வரும் காலத்தில் சவால்களை எதிர்கொள்ள முடியும். பொதுமக்கள் இன்னும் அலட்சியமாக இருந்தால் வரக்கூடிய 3 வாரங்கள் நமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story