புதிதாக 235 பேருக்கு கொரோனா


புதிதாக 235 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 April 2021 7:34 PM GMT (Updated: 17 April 2021 7:34 PM GMT)

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் ஒரே நாளில் 235 பேர் பாதிக்கப்பட்டனர்

மதுரை
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் ஒரே நாளில் 235 பேர் பாதிக்கப்பட்டனர். இதுபோல், வாலிபர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தநிலையில் மீண்டும் பாதிப்பு கடந்த ஆண்டை போல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி, உச்சக்கட்டத்தை அடைந்தது. அதுபோல் தான் தமிழகத்தில் தற்போதும் கொரோனா அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னை, காஞ்சீபுரம், தஞ்சை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாவின் 2-வது அலை கடுமையானதாக இருக்கிறது. மதுரையிலும் அதே நிலை தான் நீடிக்கிறது. கொரோனா முழுவதுமாக குறைந்துவிட்ட நிலையில் மீண்டும் கடுமையாக அதிகரித்து வருகிறது.
மதுரையில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 66 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 253 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 160 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை 24 ஆயிரத்து 286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல், நேற்று 138 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 
இதன் மூலம், இதுவரை 21 ஆயித்து 942 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரையில் நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1868 ஆக உயர்ந்துள்ளது. படிப்படியாக பாதிப்பு எண்ணிக்கை உயர்வதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணியும் நடக்கிறது. இதுபோல், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள். அவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
2 பேர் உயிரிழப்பு
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 36 வயதுடைய வாலிபர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பாதிப்புடன் வேறு சில நோய் பிரச்சினை இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபோல், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தார். இதன் மூலம் மதுரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் 2 பேர் பலியாகி இருக்கிறார்கள். மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 476 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மதுரையில் கடந்த சில மாதங்களாக உயிரிழப்புகள் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் உயிரிழப்புகள் நடந்த வண்ணம் உள்ளது. எனவே அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டும். இல்லையென்றால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றனர்.

Next Story