ரெயில்வே பயணிகள் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்


ரெயில்வே பயணிகள் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
x
தினத்தந்தி 17 April 2021 7:35 PM GMT (Updated: 17 April 2021 7:35 PM GMT)

ரெயில்வே பயணிகள் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மதுரை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்

மதுரை
ரெயில்வே பயணிகள் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மதுரை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை
கொரோனா தொற்று பரவலை தடுக்க தெற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் முக கவசம் அணியாதவர்கள் மீது அந்தந்த மாநில அரசுகள் அபராதம் விதித்து வருகின்றன. இதற்கிடையே, ரெயில்வே நிர்வாகமும் பயணிகள் முக கவசம் அணிவதை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், முக கவசம் அணியாமல் ரெயில்வே வளாகத்துக்குள் வரும் பயணிகளுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மதுரை கோட்ட மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் முழுமையாக பின்பற்றி வருகிறது. பயணிகளுக்கு ஆன்லைனில் டிக்கெட் வினியோகம், ரெயில் நிலையத்திற்குள் வரும் பயணிகளுக்கு தானாக உடல் வெப்பநிலையை சோதனை செய்யும் நவீன கருவி, கைகழுவ கிருமிநாசினி திரவம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
அபராதம்
இருப்பினும், நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை, திண்டுக்கல், ராமேசுவரம், பழனி, விருதுநகர், கோவில்பட்டி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கேரள மாநிலம் கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்கள், ரெயில் நிலைய வளாகங்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாத பயணிகளுக்கு இந்திய ரெயில்வே சட்டம் 2012-ன் படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. 
பயணிகளிடம் அபராதம் விதிக்க ரெயில் நிலைய மேலாளர், ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில் இயக்க அலுவலர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Next Story