மோட்டார் சைக்கிளில் ‘விவிபேட்’ எந்திரங்களை கொண்டு சென்ற வழக்கு விசாரணை அதிகாரியை நியமித்து விசாரிக்க முடிவு மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தகவல்


மோட்டார் சைக்கிளில் ‘விவிபேட்’ எந்திரங்களை கொண்டு சென்ற வழக்கு விசாரணை அதிகாரியை நியமித்து விசாரிக்க முடிவு மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தகவல்
x
தினத்தந்தி 17 April 2021 9:27 PM GMT (Updated: 17 April 2021 9:27 PM GMT)

வேளச்சேரியில் வாக்குச்சாவடியில் இருந்து ‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வழக்கில் விசாரணை அதிகாரியை நியமித்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கோ.பிரகாஷ் கூறினார்.

சென்னை, 

சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 92-எம் வாக்குச்சாவடியில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. வாக்குச்சாவடியில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்குப்பதிவு குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ், வாக்குச்சாவடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் கடந்த 6-ந் தேதி 6 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வேளச்சேரியில் உள்ள 92-எம் என்ற வாக்குச்சாவடியில் மட்டும் ‘விவிபேட்’ எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரம் ஆகியவற்றை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

வாக்குச்சாவடியில் இருந்து ‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற பிரச்சினை தொடர்பாக 4 ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது சாதாரண விஷயம் இல்லை என்பதால் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.

இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரியை நியமித்து விசாரிக்க முடிவு செய்து இருக்கிறோம். அவரது விசாரணைக்கு பிறகு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் வருகிற 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை அன்று முகவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின்போது கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. துணை ராணுவ படையினர், போலீஸ் உயரதிகாரிகள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கும் மையங்களை தினசரி பார்வையிட்டு வருகின்றனர்.

எவருக்கும் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டு வருகிறது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி மேகனாத், தேர்தல் தொகுதி அலுவலர் வி.ஆர்.சுப்புலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story