பாவூர்சத்திரம் அருகே வாலிபர் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்


பாவூர்சத்திரம் அருகே வாலிபர் கொலை:  குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி  பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 18 April 2021 6:39 PM GMT (Updated: 18 April 2021 6:39 PM GMT)

பாவூர்சத்திரம் அருகே வாலிபர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே வாலிபர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வாலிபர் கொலை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த மேலப்பாவூர் ஒத்தபனையடியான் தெருவைச் சேர்ந்தவர் முகேஷ் என்ற ராக்கி (வயது 27). அங்குள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்த இவர்,  குறும்பலாபேரி-மேலப்பாவூர் ரோட்டில் உள்ள தனியார் தோட்டத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், முகேஷை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதுதொடர்பாக சிலரை பிடித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் சாலைமறியல்

இதற்கிடையே முகேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகள் அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும். மேலப்பாவூரில் டாஸ்மாக் கடை உள்ளதால், அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது. எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மேலப்பாவூர் 4 ரோடு சந்திப்பு பகுதியில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தென்காசி உதவி கலெக்டர் ராஜேந்திரன், தாசில்தார் சுப்பையன், ஆலங்குளம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு பொன்னி வளவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story