திருவள்ளூர் அருகே தாறுமாறாக சென்று கடைக்குள் புகுந்த கியாஸ் லாரியால் பரபரப்பு 2 பேர் காயம்


திருவள்ளூர் அருகே தாறுமாறாக சென்று கடைக்குள் புகுந்த கியாஸ் லாரியால் பரபரப்பு 2 பேர் காயம்
x
தினத்தந்தி 19 April 2021 2:07 AM GMT (Updated: 19 April 2021 2:07 AM GMT)

திருவள்ளூர் அருகே தாறுமாறாக சென்ற கியாஸ் லாரி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 26). இவர் சொந்தமாக மினி வேனை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னை செங்குன்றத்தில் இருந்து சுமார் 45 ஆயிரம் கிலோ எரிவாயுவை ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை திருச்சியை சேர்ந்த கோபிநாத் என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில், திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை ஈக்காடு அருகே வரும்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்குள்ள கடையில் புகுந்தது. அப்போது கடைக்கு அருகே பொருட்களை ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லோடு வேன் மீது நிலைத்தடுமாறி மோதியது.

2 பேருக்கு காயம்

இந்த விபத்தில் மினிவேனை ஓட்டி வந்த ஈக்காடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் பலத்த காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. எரிவாயு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியதுடன் கடைக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story