தீ விபத்துகளை தடுப்பது எப்படி


தீ விபத்துகளை தடுப்பது எப்படி
x
தினத்தந்தி 19 April 2021 10:42 AM GMT (Updated: 19 April 2021 10:42 AM GMT)

தீ விபத்துகளை தடுப்பது எப்பட என்றும்அதை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை தீயணைப்பு துறையினர் வினியோகம் செய்தனர்.

உடுமலை
தீ விபத்துகளை தடுப்பது எப்பட என்றும்,அதை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை தீயணைப்பு துறையினர் வினியோகம் செய்தனர். 
தீத்தொண்டு நாள் வாரவிழா
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் தீத்தொண்டு நாள் வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி உடுமலையில் மத்திய பஸ் நிலையம், உழவர்சந்தை, காந்தி சதுக்கம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், உடுமலை தீயணைப்பு நிலைய அதிகாரி ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள், தீ விபத்தை தடுப்பதற்கான வழிமுறைகளை கையாள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.
விழிப்புணர்வு வழிமுறைகள்
அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டிருப்பதாவது
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்காதீர்கள். சமையல் செய்யும் இடத்தின் அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்கள். சமையல் முடிந்தவுடன் அடுப்பை முழுவதும் அணைத்து விடுங்கள். கியாஸ் பயன்படுத்தி சமைத்து முடித்ததும் பர்னர் மற்றும் சிலிண்டர் வால்வுகளை முழுவதுமாக மூடி விடுங்கள். வீட்டினுள் எரிவாயு கசிந்து இருக்கும்போது மின்சுவிட்சுகளை பயன்படுத்தாதீர்கள். அத்துடன் செல்போன்களை உபயோகப்படுத்தாதீர்கள்.
 சமைக்கும்போது பருத்தி ஆடைகளை அணியவும். சிம்னி விளக்குகளை படுக்கை அருகில் வைக்காதீர்கள். படுக்கையில் இருந்து கொண்டுபுகை பிடிக்காதீர்கள்.
பட்டாசுகள்
பட்டாசுகளை வீட்டிற்குள்ளும், கூரை வீடுகளுக்கு அருகிலும் வெடிக்காதீர்கள். குழந்தைகளை தனியே பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள். மக்கள் கூடியுள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். ராக்கெட் போன்ற வெடிகளை திறந்தவெளியில்  வெடியுங்கள். ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடாமல் படுத்து உருளுங்கள், போர்வையால் மூடி தீயை அணைக்கவும் செய்யுங்கள். தீப்புண்ணில் குளிர்ந்த நீரை ஊற்றுங்கள். தீப்புண்ணிற்கு எண்ணெய், பேனா மை போன்றவற்றை உபயோகிக்காதீர்கள். தீக்காயத்தை அழுத்தி துடைக்க கூடாது.
புகை சூழ்ந்துள்ள இடத்திலும், தீ விபத்து ஏற்பட்ட இடத்திலும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் தீயை ஆரம்பநிலையில் அணைக்க தீத்தடுப்பு சாதனங்களை உபயோகிக்க வேண்டும்.
விலை மதிப்புள்ள உயிர் மற்றும் உடமைகள் இழப்பதற்கு அல்ல. அதை விழிப்புடன் இருந்து பாதுகாப்போம். தீ விபத்தை தடுக்கவும், உடைமைகளை பாதுகாக்கவும் விழிப்புணர்வை வளர்த்துக்கொண்டு விபத்துக்களை தடுப்போம். இவ்வாறு அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணியவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

---
தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு  துண்டு பிரசுரம் வினியோகம் செய்தபோது எடுத்தபடம். 
----


Next Story