குன்னூர் ரெயில் நிலையம் வெறிச்சோடியது


குன்னூர் ரெயில் நிலையம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 19 April 2021 4:25 PM GMT (Updated: 19 April 2021 4:25 PM GMT)

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் ரெயில் நிலையம் வெறிச்சோடியது.

குன்னூர்

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால், குன்னூர் ரெயில் நிலையம் வெறிச்சோடியது.

வருகை குறைந்தது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்ல அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். குறிப்பாக ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனையொட்டி மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

ஆனால் தற்போது கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்துவிட்டது. 

கேள்விக்குறி

இதன் காரணமாக மலைரெயிலில் செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் குன்னூர் ரெயில் நிலையம் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் அங்கு குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே தென்படுகின்றனர். 

இதற்கிடையில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலுமாக இல்லாமல் போய்விடும். இதனால் அவர்களை நம்பி பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.


Next Story