மேளதாளத்துடன் வந்து மனு கொடுத்த கிராமிய கலைஞர்கள்


மேளதாளத்துடன் வந்து மனு கொடுத்த கிராமிய கலைஞர்கள்
x
தினத்தந்தி 19 April 2021 5:10 PM GMT (Updated: 19 April 2021 5:10 PM GMT)

கொரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி மேளதாளத்துடன் வந்து கிராமிய கலைஞர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தேனி: 

கிராமிய கலைஞர்கள்
உத்தமபாளையம் தாலுகா கலைவாணி கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், கிராமிய கலைஞர்கள் சிலர் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு நேற்று திரண்டனர். 

அவர்கள் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.

 அப்போது அவர்கள் தப்பு, மேளம் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசித்தபடி ஊர்வலமாக வந்தனர்.


கலெக்டர் அலுவலகம் முன்பு நின்றும் அவர்கள் மேளதாளம் வாசித்தனர்.

 பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் கிராமிய கலைஞர்கள் 3 லட்சம் குடும்பங்களுக்கு மேல் உள்ளனர். 

இவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கலை நிகழ்ச்சிகள் 90 சதவீதத்துக்கும் மேல் நடப்பது கோவில் திருவிழாக்களில் தான். தற்போது அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், தமிழகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


எனவே, கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் பெரிய கோவில் திருவிழாக்களை தவிர்த்து சிறிய மற்றும் கிராம கோவில்களில் மட்டுமாவது திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும். 

சிறிய மற்றும் கிராம கோவில் திருவிழாக்களை நடத்துவதில் இடர்பாடுகள் இருக்குமாயின் கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் ஊரடங்கு தடைக்காலம் அமலில் உள்ள கால கட்டத்தில் கிராமிய கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கியுடன் ஊர்வலம்
அதுபோல், தமிழக ஒளி, ஒலி மற்றும் மேடை, பந்தல் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சிலரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். 

ஊர்வலத்தின் போது அவர்கள் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை கையில் தூக்கி வந்தனர்.

கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் அவர்கள் கொடுத்த மனுவில், "தேனி மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட ஒளி, ஒளி, பந்தல் மேடை அமைப்பாளர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் உள்ளோம். 

அரசு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் நாங்கள் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளோம். 

50 சதவீத ஊழியர்களுடன் நகைக்கடை, துணிக்கடை, தொழிற்சாலைகள் போன்றவை நடத்திக் கொள்ள அனுமதித்துள்ளது. 

அதுபோன்று எங்களையும் சிறுதொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். திருமண நிகழ்வுகளில் ஒலி, ஒளி மற்றும் மேடை அலங்காரம் போன்ற தொழிலை பாதுகாப்புடன் செய்ய அனுமதிக்க வேண்டும். 

திருவிழா காலங்களில் வண்ண விளக்குகள், ஒலி, ஒளி அமைத்து 50 சதவீத மக்களுடன் அரசு அறிவித்த சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Next Story