நாட்டுப்புற கலைஞர்கள், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


நாட்டுப்புற கலைஞர்கள், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2021 8:29 PM GMT (Updated: 19 April 2021 8:29 PM GMT)

கொரோனா நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி நாட்டுப்புற கலைஞர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்:

வேடமிட்டு வந்த நாட்டுப்புற கலைஞர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வாரத்தில் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மனுக்கள் போடுவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை என்பதால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு தோழர் ஜீவா அம்பேத்கர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுப்ரமணியன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஆசைமுத்து ஆகியோர் தலைமையில் பல்வேறு வேடமிட்டு வந்த நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நலவாரிய அட்டை
அப்போது அவர்கள் நடனமாடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கூறுகையில், நல வாரியத்தில் பதிவு பெற்ற, பதிவு பெறாத அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கும் கொரோனா நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரத்தை தமிழக அரசு வழங்கிட வேண்டும். கடந்த ஆண்டு கொரோனா நிவாரண தொகை கலைஞர்களுக்கு சரிவர கிடைக்கவில்லை. எனவே இந்த ஆண்டு அனைவருக்கும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலவாரிய அட்டை, அடையாள அட்டை, கிராம நிர்வாக அலவலர் சான்று தடையின்றி கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.
மூத்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில் உள்ள சிரமங்களை களைந்திட வேண்டும். கொரோனா தடை காலங்களில் திருவிழா, பண்டிகை காலம், குடும்ப நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைஞர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அரசு விளம்பர நிகழ்ச்சிகளுக்கு நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், என்றனர். இதையடுத்து அவர்களில் சிலர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர்.
திருவிழாக்கள் நடத்த அனுமதி
பெரம்பலூர் மாவட்ட தமிழக வாடகை பொருட்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொடுத்த மனுவில், ஒலி, ஒளி, ஜெனரேட்டர், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம், மணவரை அலங்காரம் அமைப்பாளர்கள் சார்பாக இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நிறைய தொழிலாளர்கள் வேலை பெற்று வந்தனர். எங்களது தொழில் ஆண்டு முழுவதும் வருவாய் தரக்கூடியது அல்ல. விசேஷங்கள், விழாக்கள் நடைபெறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் வேலை இருக்கும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் தொழில் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்தோம்.
இந்த ஆண்டும் திருவிழாக்களுக்கு தடை விதித்து இருப்பதால் எங்கள் தொழில் பாதிக்கப்படும். எனவே திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மண்டபத்தில் 50 சதவீத விருந்தினர்களுடன் நடத்தி கொள்ளவும், அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி திருவிழாக்களை நடத்திக்கொள்ளவும் அனுமதிக்க அரசு உத்தரவிட வேண்டும். இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்படாது, என்று கூறிப்பட்டிருந்தது.
நிவாரண நிதி
இதேபோல் டிரம்செட் கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தி்ல் கொடுத்த மனுவில், அரசு வழங்கும் நலவாரிய அட்டை, சலுகைகள் மற்றும் கொரோனா நிவாரண நிதி உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர்.
வேப்பந்தட்டை தாலுகா கை.களத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முஹம்மது கனி கொடுத்த மனுவில், ஒரு பிரச்சினையை காரணம் காட்டி என்னை பள்ளிவாசலில் ரமலான் தொழுகை செய்யக்கூடாது, பள்ளிவாசல் முன்பு உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என்றும், ரமலான் நோன்பு கஞ்சி கொடுக்கக்கூடாது என்றும் சிலர் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் எனது குடும்பத்தை தனிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
டிரைவரின் மனைவி மனு
வேப்பந்தட்டை தாலுகா வெங்கனூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரனின் மனைவி தனலட்சுமி, தனது குடும்பத்தினருடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எனது கணவர் ரவிச்சந்திரன் (வயது 47) நாமக்கல்லில் இயங்கி வரும் ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 12-ந்தேதி அவர் ஈரோட்டில் இருந்து லாரியில் ஜவுளி லோடு ஏற்றிக்கொண்டு ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகருக்கு புறப்பட்டார். கடந்த 16-ந்தேதி லோடு இறக்க வேண்டிய இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு, அலுவலகத்துக்கு சென்றதாகவும், பின்னர் அவரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. எனவே காணாமல் போன என்னுடைய கணவர் ரவிச்சந்திரனை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க கலெக்டர் வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தார்.

Next Story