ஆடு திருடியவர்களை கண்டுபிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


ஆடு திருடியவர்களை கண்டுபிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 April 2021 8:29 PM GMT (Updated: 19 April 2021 8:29 PM GMT)

குன்னம் அருகே ஆடு திருடியவர்களை கண்டுபிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குன்னம்:

ஆடுகளை திருடினர்
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்ட காரை, தெற்குமாதவி, இலுப்பைக்குடி, கூத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை, மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் சிலர் திருடிச்செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று தெற்குமாதவி கிராமத்தில் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதையறிந்த தெற்கு மாதவி கிராமத்தை சேர்ந்தவர்கள், மர்மநபர்களின் மோட்டார் சைக்கிளை பின்தொடந்து சென்றனர். இதை பார்த்த அந்த நபர்கள், திருடிய ஆடுகளை கீழே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
சாலை மறியல்
இதையடுத்து ஆடுகளை திருடிச்செல்லும் மர்ம நபர்களை கண்டுபிடிக்கக்கோரி, தெற்கு மாதவி கிராமத்தில் சிறுவாச்சூர்- அரியலூர் செல்லும் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story