கொரோனா காலகட்டத்தில் வியாபாரத்தில் நஷ்டம்: கடன் தொல்லையால் இரும்பு கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை


கொரோனா காலகட்டத்தில் வியாபாரத்தில் நஷ்டம்: கடன் தொல்லையால் இரும்பு கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கொரோனா காலகட்டத்தில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான இரும்பு கடை உரிமையாளர் கடையின் உள்ளே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவருக்கு திருமணமாகி அனிதா (39) என்ற மனைவியும், மனிஷா (15) என்ற மகளும், ஜஸ்வந்த் (11) என்ற மகனும் உள்ளனர்.

ரமேஷ் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இரும்பு கடையை நடத்தி வந்தார். இந்தநிலையில், நேற்று அதிகாலை வழக்கம்போல் வீட்டில் இருந்து புறப்பட்டு இரும்பு கடைக்கு வந்த ரமேஷ், திடீரென அங்குள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொழில் நஷ்டம்

இதுகுறித்து தகவலறிந்து சம்ப இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், கொரோனா காலகட்டத்தில் இரும்பு கடை வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதாலும், கடன் நெருக்கடிக்கு ஆளானதாலும், கடும் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், ரமேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story