தியாகதுருகம் தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடி கைது


தியாகதுருகம் தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடி கைது
x
தினத்தந்தி 20 April 2021 5:44 PM GMT (Updated: 2021-04-20T23:14:35+05:30)

தியாகதுருகம் தொழிலாளி சாவில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலனுடன் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.

கண்டாச்சிமங்கலம்


தொழிலாளி

தியாகதுருகம் அருகே உள்ள வீ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 40) தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் மாடியில் மது அருந்தினார். பின்னர் மீது மதுபானத்தை அங்கேயே வைத்துவிட்டு, வீட்டின் அறைக்கு வந்தார். 

பின்னர் மறுநாள் காலையில் மாடிக்கு சென்று மீதமிருந்த மதுவை குடித்துவிட்டு வந்த சுப்பிரமணி தனது மகள் அபிநயாவிடம், மதுவில் மண்எண்ணெய் வாடை அடிப்பதாக கூறினார். இருப்பினும் அவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். 

வாந்தி-மயக்கம் 

ஆனால் சுப்பிரமணியால் அங்கு முழுமையாக வேலை செய்ய முடியவில்லை. உடல் நிலை சோர்வாக இருந்ததால் வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு அவர் வீட்டுக்கு வந்தார். அடுத்த சில நிமிடங்களில் சுப்பிரமணிக்கு வாந்தி ஏற்பட்டது.  மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

மனைவியிடம் விசாரணை 

இந்த நிலையில் தனது அண்ணன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக சுப்பிரமணியின் தங்கை இந்திரா, தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் சுப்பிரமணியின் மனைவி செல்வி(35) மீது சந்தேகம் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மதுவில் விஷம் கலந்து... 

செல்விக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயமுருகன்(43) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். ஆனால் இவர்களது கள்ளக்காதலுக்கு சுப்பிரமணி இடையூறாக இருந்தார். எனவே இருவரும் சேர்ந்து சுப்பிரமணியை கொலை செய்ய திட்டமிட்டனர்.  அதன்படி சுப்பிரமணி குடித்து விட்டு, மீதி வைத்திருந்த மதுவில் செல்வி விஷம் கலந்தார். இது பற்றி தெரியாத சுப்பிரமணி, மது என்று நினைத்து அதனை குடித்ததால் சுப்பிரமணி இறந்தார். பின்னர் எதுவும் தெரியாததுபோல் செல்வி நாடகமாடினார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
இதையடுத்து செல்வியையும், அவரது கள்ளக்காதலன் ஜெயமுருகனையும்  போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Next Story