திருச்சியில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுடன் வந்த வேனால் பரபரப்பு அதிகாரிகள் விசாரணை
திருச்சியில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுடன் வந்த வேனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
வாக்கு எண்ணும் மையம்
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. அதன் பின்னர் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பூட்டி `சீல்' வைக்கப்பட்டன.
திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், திருச்சி ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு `சீல்' வைக்கப்பட்டன. அங்கு 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தி.மு.க. தொடர் புகார்
இதற்கிடையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தை `ஹேக்' செய்யலாம் என்ற வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு அருகே வரும் வாகனங்களை தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்கின்றனர்.
கண்டெய்னர் லாரி மற்றும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை தி.மு.க.வினர் பிடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
திடீரென வந்த வேன்
இந்த நிலையில் நேற்று மதியம் `என்.என்.எலக்ட்ரானிக்ஸ்' என்று எழுதப்பட்ட வேன் ஒன்று, ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள மைதானத்திற்குள் திடீரென வந்தது.
இதைப்பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த வேன், கல்லூரி வளாகத்திற்குள் தடுத்து நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் உதவி கமிஷனர் வேதரத்தினம், திருச்சி கோட்டாட்சியர் விசுவநாதன் மற்றும் தாசில்தார் ஆகியோர் விரைந்து வந்தனர்.
தி.மு.க.வேட்பாளர் வாக்குவாதம்
மேலும் திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ், நகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்டவர்களும் ஜமால் முகமது கல்லூரிக்கு விரைந்து வந்தனர்.தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேன், முன் அனுமதி பெறாமல் கல்லூரிக்குள் எப்படி நுழைந்தது? என்று அலுவலர்களுடன் இனிகோ இருதயராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக அங்கு இருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை வேட்பாளர் பார்வையிட்ட பின்னரே நிம்மதி அடைந்தார்.அதிகாரிகள் நடத்திய விசாரணையில், வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் நாளில் சில இடங்களில் எல்.இ.டி. டி.வி மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தும் பணிக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஒப்பந்தம் செய்யப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்கள் சிலர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுடன் வந்தது தெரிய வந்தது.
அதிகாரிகள் விசாரணை
மேலும் ஒப்பந்ததாரர்களிடம் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைவதற்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது.இது தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
குழப்பம் இல்லை
இது தொடர்பாக மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் விஸ்வநாதன் கூறுகையில், "வாக்கு எண்ணும் நாளான மே 2-ந் தேதி வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முடிவுகளை அவ்வப்போது தெரிந்து கொள்வதற்காக எல்.இ.டி. டி.வி. மற்றும் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவதற்காக தனியாரால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதற்கான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுடன் வந்த வேன் தான் அது. மற்றபடி வாக்கு எண்ணும் மையத்தில் எந்த குழப்பமும், பிரச்சினையும் இல்லை" என்றார்.
Related Tags :
Next Story