வாக்கு எண்ணிக்கையின் போது 16 மேஜைகள் போட கோரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு அறையிலும் கூடுதல் மேஜைகள் போடப்பட வேண்டும் என்று வேட்பாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
விருதுநகர்,ஏப்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு அறையிலும் கூடுதல் மேஜைகள் போடப்பட வேண்டும் என்று வேட்பாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் தலைமையில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு அறையில் 8 மேஜைகள் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பரவல் உள்ள நிலையில 250 சதுர மீட்டருக்கு ஒரு மேஜை போட வேண்டிய அவசியம் உள்ள நிலையில் ஒரு அறையில் 8 மேஜைகள் மட்டுமே போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 8 மேஜைகள் மட்டும் போடப்பட்டால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகும் நிலை ஏற்படும். எனவே இதற்கு தி.மு.க. வேட்பாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் ஆட்சேபனை தெரிவித்தனர். ஒரு அறையில் 8 மேஜைகள் மட்டும் போடப்பட்டால் ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 40 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டி உள்ளது. அவ்வாறு 40 சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு குறைந்தபட்சம் ஒன்றரை நாள் ஆகி விடும் என்பதால் 2 அறைகளில் தலா 8 மேஜைகள் வீதம் 16 மேஜைகள் போட்டு ஒரே நேரத்தில் 2 அறைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
பிரச்சினைகள் ஏற்படும்
வாக்கு எண்ணிக்கைக்கு மிகவும் தாமதம் ஏற்பட்டால் அலுவலர்களுக்கும், வேட்பாளர்களின் முகவர்களுக்கும் மிகுந்த சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நடைமுறை பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தி.மு.க. வேட்பாளர்கள் தெரிவித்தனர். கடந்த தேர்தல்களில் ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
முடிவு எடுக்கப்படும்
இதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் இது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரியுடன் கலந்தாய்வு செய்து முடிவெடுத்து தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், தி.மு.க. வேட்பாளர்கள் அருப்புக்கோட்டை தொகுதி சாத்தூர் ராமச்சந்திரன், திருச்சுழி தங்கம் தென்னரசு, விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சாத்தூர் ரகுராமன், அ.தி.மு.க. வேட்பாளர்கள் சாத்தூர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் மான் ராஜ், சிவகாசி லட்சுமி கணேசன், விருதுநகர் பா.ஜ.க. வேட்பாளர் பாண்டுரங்கன், திருச்சுழி ராஜசேகர், அ.ம.மு.க வேட்பாளர் ராஜவர்மன் உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story