புதிய அரசு பொறுப்பு ஏற்கும் வரை கீழ்பவானி வாய்க்காலில் எந்தவித பணியையும் தொடங்கக்கூடாது விவசாயிகள் கூட்டத்தில் முடிவு


புதிய அரசு பொறுப்பு ஏற்கும் வரை  கீழ்பவானி வாய்க்காலில் எந்தவித பணியையும் தொடங்கக்கூடாது விவசாயிகள் கூட்டத்தில் முடிவு
x

புதிய அரசு பொறுப்பேற்கும் வரை கீழ்பவானி வாய்க்காலில் எந்தவித பணிகளையும் தொடங்கக்கூடாது என சென்னிமலை அருகே விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதிய அரசு பொறுப்பேற்கும் வரை கீழ்பவானி வாய்க்காலில் எந்தவித பணிகளையும் தொடங்கக்கூடாது என  சென்னிமலை அருகே விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ரூ.709 கோடி
கீழ்பவானி பாசன திட்ட பிரதான கால்வாயை விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் போன்ற பணிகளை செய்ய அரசின் சார்பில் ரூ.709 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 
இந்த பணிகளை செய்தால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் செறிவூட்டுவது நின்று விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் வறட்சியும் ஏற்படும் என கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அதேசமயம் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே கடைக்கோடி விவசாயிகளுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்பதால் இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில், நேற்று சென்னிமலை அருகே பசுவபட்டி மாரியம்மன் கோவிலில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாசன விவசாயிகளின் கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் மு.ரவி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், ‘சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை கீழ்பவானி வாய்க்காலில் எந்த பணிகளையும் தொடங்க கூடாது.  அதே சமயம் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்காமல், உடைந்த, சிதிலமடைந்த பாலங்கள் மற்றும் வாய்க்கால் பகுதிகளை சீரமைக்கும் பணிக்கு மட்டும் ஆதரவு தெரிவிப்பது,’ என முடிவு செய்யப்பட்டது.   மேலும் சென்னிமலை அருகே தலவுமலை பகுதியில் இன்று (புதன்கிழமை) கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் நவீனப்படுத்தும் பணியை பொதுப்பணி துறையினர்  தொடங்க இருப்பதாகவும், அப்படி தொடங்கினால் நூற்றுக்கணக்கான  விவசாயிகள்  ஒன்றிணைந்து  சென்று பணிகளை தடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
இந்த கூட்டத்தில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story