கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஊழியர்கள் உள்பட 70 பேருக்கு கொரோனா
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஊழியர்கள் உள்பட 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஊழியர்கள் மற்றும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர்.
மேலும் ஊழியர்கள் குடும்பத்துடன் தங்கியிருக்கும் அணு விஜய் நகரிலும் பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த 4 நாட்களாக நடந்த இந்த பரிசோதனையில் நேற்று 10 பேர் உள்பட இதுவரை மொத்தம் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரி, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நேற்று பணகுடியில் 3 பேர், ஆவரைகுளத்தில் 3 பேர், தெற்கு வள்ளியூரில் 2 பேர், வடக்கன்குளத்தில் 2 பேர், வள்ளியூர், கூடங்குளம், கன்னகுளம், செட்டிகுளம் பகுதிகளில் தலா ஒருவர் உள்பட வள்ளியூர் வட்டாரத்தில் 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story