தென்காசியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தொடர் மின்தடையால் பரபரப்பு


தென்காசியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தொடர் மின்தடையால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 April 2021 3:54 AM IST (Updated: 21 April 2021 3:54 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பட்ட தொடர் மின்தடையால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தென்காசியை அடுத்த கொடிகுறிச்சியில் உள்ள யு.எஸ்.பி. கல்லூரி கட்டிடத்தில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதற்காக இந்த தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளுக்கு முன்பு எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இதனை கண்காணிப்பதற்காக தனியாக ஒரு அறை அமைத்து அதில் ஒவ்வொரு தொகுதிக்கும் டி.வி. அமைக்கப்பட்டு அதனுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கும் அறைகளின் முன்புள்ள கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் தொகுதிக்கான எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு இரவில் மின்தடை 4 நிமிடம் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தி.மு.க.வினர் புகார் செய்தனர். அதன்பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவில் 5 நிமிடம் மின்தடை ஏற்பட்டது. இதேபோல் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அனைத்து அறைகள் முன்பு உள்ள பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து அங்கு கண்காணிப்பு பணியில் இருக்கும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் தி.மு.க. மாவட்ட தலைமைக்கு தகவல் கொடுத்தனர். இதனால் கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் உடனடியாக இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் செய்தார். மாவட்ட கலெக்டர் சமீரன் அவருக்கு பதிலுக்கு தகவல் அனுப்பியுள்ளார். அதில், அங்கு உரிய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சாதாரணமாக ஏற்படும் மின்தடை தான் இது. இருந்தாலும் தொடர்ந்து இதுபோல் நடக்காமல் பார்க்க மின்வாரிய கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Next Story