பூலாம்பட்டி பேரூராட்சியில் நீரேற்று நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


பூலாம்பட்டி பேரூராட்சியில் நீரேற்று நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 April 2021 4:22 AM IST (Updated: 21 April 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

நீரேற்று நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

எடப்பாடி:
பூலாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பனங்காடு பகுதியில் பேரூராட்சிக்கான குடிநீரேற்று நிலையம் உள்ளது. சுமார் 63 சென்ட் இடத்தில் இந்த நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு காவிரி ஆற்றில் இருந்து நீர் கொண்டு வந்து ஏற்றப்பட்டு பில்லுக்குறிச்சி பகுதியில் சுத்திகரிக்கப்பட்டு பூலாம்பட்டி முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நீரேற்று நிலைய பகுதியில் உள்ள காலி இடத்தில் வீரபாண்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நீரேற்று நிலையம் அமைக்க அப்பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த பூலாம்பட்டி பகுதியை சேர்ந்த திமுக, காங்கிரஸ், பா.ம.க.வை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூலாம்பட்டி கைலாசநாதர் கோவிலில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினர்.
அதைத்தொடர்ந்து பூலாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட நீரேற்று நிலைய காலி இடம் எதிர்காலத்தில் பூலாம்பட்டி வளர்ச்சிக்கு தேவைப்படுவதால் அங்கு நீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வீரபாண்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்து அமைத்திட வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷிடம் அரசியல் கட்சியினர் கோரிக்கை மனு வழங்கினர். 
இதுகுறித்து பூலாம்பட்டி செயல் அலுவலர் பிரகாஷ் கூறும்போது,‘பூலாம்பட்டி நீரேற்று நிலையத்தில் உள்ள இடம் வருங்காலத்தில் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு தேவை என அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி விட்டோம். தற்போது அரசியல் கட்சியினர் வழங்கிய கோரிக்கை மனுவையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும’் என்றார். 

Next Story