கொேரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏற்காடு, மேட்டூரில் பூங்காக்கள் மூடப்பட்டன


கொேரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏற்காடு, மேட்டூரில் பூங்காக்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 21 April 2021 4:23 AM IST (Updated: 21 April 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காடு, மேட்டூரில் பூங்காக்கள் மூடப்பட்டன

சேலம்:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஒகேனக்கல், ஏற்காடு, மேட்டூரில் பூங்காக்கள் மூடப்பட்டன.
மேட்டூர் அணை பூங்கா
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு சுற்றுலாத்தலங்களில் உள்ள பூங்காக்களை சுற்றுலா பயணிகளை அனுமதிக்காமல் மூட உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பேரில் சுற்றுலாத்தலமான மேட்டூரில் அமைந்துள்ள அணை பூங்கா நேற்று காலை முதல் மூடப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அணை பூங்கா பணிக்கு வந்த பணியாளர்கள் அனைவரும் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டு பணிக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 
நுழைவுவாயில் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி அணை பூங்கா மூடப்பட்டு நேற்று வெறிச்சோடி காட்சி அளித்தது.
ஏற்காடு
கொரோனா பரவலை தடுக்க ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வர நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்காட்டில் உள்ள படகு சவாரி குழாம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம் போன்ற முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. 
சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்ற காரணத்தால் ஏற்காடு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அனைத்து பூங்காவிலும் பராமரிப்பு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
கடைகள் அடைப்பு
மேலும் பெரும்பாலான சாலையோர கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சிலர் சிறிது நேரம் கடைகளை திறந்து வைத்திருந்தும், சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாததால் கடைகளை மூடிவிட்டனர். 
மேலும் ஏற்காடு அடிவாரம் பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு சேலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். 
இது குறித்து ஏற்காட்டில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-
சுற்றுலா பயணிகள் வராததால் ஏற்காட்டில் வாழும் மக்கள் எங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். எங்களுக்கு ஒரு ஆண்டில் ஏப்ரல், மே ஆகிய 2 மாதம் தான் வருமானம் கிடைக்கும். இந்த 2 மாத வருவாய் மூலம் தான் ஒரு ஆண்டுக்கு நாங்கள் பிழைப்பு நடத்த வேண்டும். 
இந்த சூழ்நிலையில் ஊரடங்கு காரணமாக ஏற்காடு பகுதியில் உள்ள சாலையோர கடைகள், கடைகள், ஓட்டல்கள், விடுதிகள் என பலதரப்பட்ட வியாபாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே எங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா
இதே போன்று சேலம் அருகே உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவும் மூடப்பட்டு உள்ளது. இது குறித்து வன அதிகாரிகளிடம் கேட்டபோது,‘ கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பூங்காக்களை மூட உத்தரவிட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை குரும்பப்பட்டி பூங்கா மூடப்பட்டு இருக்கும். எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் யாரும் பூங்காவிற்கு வரவேண்டாம்’ என்று கூறினர்.
ஒகேனக்கல்
கொரோனா பரவலை தடுக்க தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வரவும், அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை விதித்து கலெக்டர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஒகேனக்கல்லில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
இதனிடையே எப்போதும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் அதிகம் உள்ள மெயின் அருவி, பஸ் நிலையம், நடைபாதை, முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடின. 
இதேபோன்று உணவகங்கள், கடைகளில் சுற்றுலா பயணிகள் இன்றி காணப்பட்டது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Next Story