தடையை மீறி லிபியா நாட்டிற்கு சென்று திரும்பியவர் சென்னை விமான நிலையத்தில் கைது


தடையை மீறி லிபியா நாட்டிற்கு சென்று திரும்பியவர் சென்னை விமான நிலையத்தில் கைது
x
தினத்தந்தி 21 April 2021 12:10 AM GMT (Updated: 21 April 2021 12:10 AM GMT)

இந்திய அரசு விதித்துள்ள தடையை மீறி லிபியா நாட்டிற்கு சென்று சென்னை திரும்பிய ஒருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அப்போது சென்னையை சோ்ந்த முகமது சமீம் (வயது 46) என்ற பயணி ஒருவர், தோகாவில் இருந்து லிபியா நாட்டிற்கு சென்றுவிட்டு கத்தாா் வழியாக சென்னை வந்தது தெரியவந்தது. லிபியா நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு நலன் கருதி இந்தியா்கள் யாரும் லிபியா நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று இந்திய அரசு தடை விதித்தது. அந்த தடையை மீறி பயணி முகமது சமீம் லிபியா நாட்டிற்கு சென்று வந்ததால் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

விசாரணை

அப்போது பிரபலமான ஒரு மருந்து கம்பெனியில் மருந்தாளுனராக பணியாற்றி வரும் தன்னை அந்நிறுவனம் தான் முறையான ஆவணங்களுடன் பணி நிமித்தமாக லிபியாவிற்கு அனுப்பி வைத்ததாக முகமது சமீம் தெரிவித்தார்.

ஆனால் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அவரது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் மேல் விசாரணை நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனா். அவர்கள் முகமது சமீமை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Next Story