வில்லியனூர் அருகே மட்டன் பிரியாணி சாப்பிட்ட 4-ம் வகுப்பு மாணவி திடீர் சாவு உணவு விஷமானதா? போலீசார் விசாரணை


வில்லியனூர் அருகே மட்டன் பிரியாணி சாப்பிட்ட 4-ம் வகுப்பு மாணவி திடீர் சாவு உணவு விஷமானதா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 April 2021 11:08 AM IST (Updated: 21 April 2021 11:08 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே மட்டன் பிரியாணி சாப்பிட்ட 4-ம் வகுப்பு மாணவி திடீரென்று உயிரிழந்தாள். சாப்பிட்ட உணவு விஷமானதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

வில்லியனூர், 

வில்லியனூர் அருகே அரியூர் வெங்கடேஸ்வராநகர் பாரதி வீதியை சேர்ந்தவர் காதர்மொய்தீன் (வயது 34). குரும்பாபேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ராஷீலா பேகம். இவர்களுக்கு ஆயிஷா பேகம் (10), ஆரிபா பேகம் (7), ஆஷிகா (4) ஆகிய 3 மகள்கள். இதில் மூத்த மகள் ஆயிஷா பேகம், அரியூரில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று முன்தினம் மதியம் வீட்டில் செய்த மட்டன் பிரியாணியை சிறுமி ஆயிஷா பேகம் சாப்பிட்டாள். மாலையில் 3 மெதுவடைகளையும் சாப்பிட்டுள்ளார். பின்னர் இரவு வீட்டில் சகோதரிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆயிஷாபேகம் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஆயிஷாபேகத்தை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் பலனின்றி பரிதாபமாக சிறுமி ஆயிஷா பேகம் உயிரிழந்தாள்.

இது குறித்து காதர்மொய்தீன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாப்பிட்ட உணவு விஷமாகி மாணவி ஆயிஷாபேகம் இறந்து போனாளா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story