கொப்பரை உற்பத்தி செய்யும் நவீன எந்திரம்


கொப்பரை உற்பத்தி செய்யும் நவீன எந்திரம்
x
தினத்தந்தி 21 April 2021 5:16 PM IST (Updated: 21 April 2021 5:16 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சூடான காற்று மூலம் கொப்பரை உற்பத்தி செய்யும் நவீன எந்திரம் விரைவில் விவசாயிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போடிப்பட்டி
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சூடான காற்று மூலம் கொப்பரை உற்பத்தி செய்யும் நவீன எந்திரம் விரைவில் விவசாயிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோலார் உலர்களம்
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு 40 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் அதனைச் சார்ந்து கொப்பரை உற்பத்தியும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் மழைக் காலங்களில் கொப்பரை உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க நவீன முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் பயன்பெறும் வகையில் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சோலார் உலர்களம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் கொப்பரை உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகங்களில் சூடான காற்று மூலம் கொப்பரை உற்பத்தி செய்யும் வகையில் நவீன எந்திரம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த எந்திரம் விரைவில் விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து எந்திர தயாரிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது
உடுமலை பகுதியில் பழமையான சூரிய ஒளியில் உலர்த்தும் முறையிலேயே அதிக அளவில் கொப்பரை உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மழைக் காலங்களில் கொப்பரை உற்பத்தியில் தேக்க நிலை ஏற்படுகிறது.
2 நாட்களில் கொப்பரை உற்பத்தி
தற்போது நேரடியாக சூரிய ஒளியில் கொப்பரைகளை உலர வைப்பதற்காக சோலார் உலர்களங்களைப் பயன்படுத்துதல், புகை வெப்பத்தைப் பயன்படுத்துதல், சூளைகளின் மூலம் காயவைத்தல் போன்ற பல வழிமுறைகள் பயன்படுத்தப்படுகிறது. இங்கு மறைமுக சூடான காற்றின் மூலம் காய வைக்கும் எந்திரம் தற்போது நிறுவப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் தோட்டத்திலுள்ள காய்களை முழுதாக இங்கு கொண்டு வந்தால் இங்குள்ள எந்திரத்தின் மூலம் இரண்டாக உடைத்துக் கொள்ளலாம்.இதில் தேங்காய் தண்ணீரையும் வீணாகாமல் சேகரிக்க முடியும்.
பின்னர் உடைத்த தேங்காய்களை இந்த எந்திரத்திலுள்ள அறையில் போட்டு மூடி விட வேண்டும்.அங்கு சூடான காற்றின் மூலம் சுமார் 8 மணி நேரத்தில் தேங்காய்கள் காய்ந்து விடும். அதன்பிறகுஅந்த தேங்காய்களை சேகரித்து சிரட்டையை நீக்கி விட்டு எந்திரத்திலுள்ள மற்றொரு அறையிலிட்டு மூடி விட்டால்  8 மணி நேரத்தில் தேவையான ஈரப்பதத்துடன் தரமான கொப்பரைகள் தயாராகி விடும். இந்த எந்திரத்தில் ஒரே நேரத்தில் சுமார் 5 ஆயிரம் தேங்காய்களிலிருந்து கொப்பரை உற்பத்தி செய்ய முடியும்.இதில் சூடான காற்று உற்பத்தி செய்வதற்கு விறகு அடுப்பு பயன்படுத்துகிறது. 
தென்னை மட்டைகள்
இதில் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் வீணாகும் மட்டைகள் உள்ளிட்ட மரக் கழிவுகளையும் தேங்காய் சிரட்டைகளையுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.பொதுவாக திறந்த வெளியில் சூரிய ஒளியின் மூலம் காய வைத்து கொப்பரை உற்பத்தி செய்வதற்கு சுமார் 6 முதல் 8 நாட்கள் தேவைப்படும். இந்த எந்திரம் மூலம் அதிக பட்சம் 2 நாட்களில் கொப்பரை உற்பத்தி செய்ய முடியும். மேலும் திறந்த வெளியில் கொப்பரை உற்பத்தி செய்யும்போது காற்றிலுள்ள தூசி மற்றும் கிருமிகளால் கொப்பரையில் தரம் குறையும் சூழல் உள்ளது. 
அத்துடன் கொப்பரையில் பூஞ்சை தாக்குதலைத் தவிர்க்க சல்பர் போன்ற ரசாயனங்களை ஒருசில கொப்பரை உற்பத்தியாளர்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.இந்தவிதமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விதமாகவும் மழைக்காலங்களில் கொப்பரை உற்பத்தியை சீராக மேற்கொள்ளும் வகையிலும் இந்த எந்திரத்தின் பயன்பாடு இருக்கும். இயற்கை முறையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் ரசாயன கலப்பற்ற சுத்தமான கொப்பரை உற்பத்தி செய்வதற்கு இந்த எந்திரம் வரப்பிரசாதமாக இருக்கும்.மேலும் மரச்செக்கு மூலம் தேங்காய் எண்ணெய் உற்பத்தி மேற்கொள்ளும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தரமான கொப்பரை உற்பத்திக்கு இந்த எந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த கொப்பரை உற்பத்தி எந்திரம் விரைவில் விவசாயிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

---
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கில் கொப்பரை உற்பத்தி செய்யும் நவீன எந்திரம் நிறுவும் பணிகள் நடைபெற்றபோது எடுத்த படம்.
------
தேங்காய்களை உடைக்க பயன்படும் எந்திரம்
--

Next Story