புலியை விஷம் வைத்து கொன்ற 2 பேர் கைது
சிங்காரா வனப்பகுதியில் புலியை விஷம் வைத்து கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி வனத்துறையினர் ரோந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு பெண் புலி ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் சிறிது தொலைவில் 2 குட்டிகள் சத்தமிட்டு கொண்டு இருந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து, இறந்த புலியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் 2 குட்டிகளை மீட்டு சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் இறந்து கிடந்த புலியின் உடலை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது மாட்டு இறைச்சியில் விஷம் வைத்து புலி கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிங்காரா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தலைமையில் வனச்சரகர் மாரியப்பன் மற்றும் வனத்துறையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மசினகுடி ஆச்சக்கரையை சேர்ந்த அகமது கபீர் (வயது 22), சவுகத் அலி (55) மற்றும் அவரது மகன் சதாம் (29), குரும்பர்பாடியை சேர்ந்த கரியன் (25) ஆகியோர் புலியை விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து அகமது கபீர், கரியன் ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கூடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள சதாம், சவுக்கத் அலி ஆகியோரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விஷம் வைத்து புலி கொல்லப்பட்ட வழக்கில், கடந்த 5 மாதங்களாக துப்பு துலங்காமல் இருந்தது. தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story