குற்ற வழக்கில் இருந்து மகனை விடுவிப்பதாக கூறி உதவி தலைமை ஆசிரியரிடம் ரூ.43 லட்சம் மோசடி
குற்ற வழக்கில் இருந்து மகனை விடுவிப்பதாக கூறி உதவி தலைமை ஆசிரியரிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்த போலி வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திண்டுக்கல்:
குற்ற வழக்கில் இருந்து மகனை விடுவிப்பதாக கூறி உதவி தலைமை ஆசிரியரிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்த போலி வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
உதவி தலைமை ஆசிரியர்
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் உமையன் (வயது 74). ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர். இவர், மாவட்ட கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் என்ஜினீயர் சிவநாத்.
இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஒரு குற்ற வழக்கில் சிறைக்கு சென்று பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் எனது வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர், தான் ஒரு வக்கீல் என்று தெரிவித்தார். மேலும் எனது மகன் சிவநாத்தை அந்த வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்துவிடுகிறேன் என்று கூறினார்.
அதை உண்மை என நம்பிய நானும், அவரிடம் எனது மகனின் வழக்கை நடத்த சம்மதம் தெரிவித்தேன். பின்னர் வழக்கு செலவுக்காக என்னிடம் அடிக்கடி லட்சக்கணக்கில் கார்த்தி பணம் வாங்கினார்.
ரூ.43 லட்சம் மோசடி
அந்த வகையில் ரூ.43 லட்சத்து 8 ஆயிரத்தை அவருக்கு வழக்கு செலவுக்காக நான் கொடுத்தேன். ஆனால் எனது மகனை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கவே இல்லை. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் எனது வீட்டுக்கு வந்த அவர், எனது மகனை வழக்கில் இருந்து விடுவித்துவிட்டதாக கூறி அதற்கான கோர்ட்டு ஆவணங்களையும் கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் அந்த ஆவணம் போலியானதோ? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் மூலம் வேறு வக்கீல்களை சந்தித்து அந்த ஆவணங்களை காட்டி விசாரித்தேன்.
அப்போது அந்த ஆவணங்கள் போலியானது என்பதும், கார்த்தி போலி வக்கீல் என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் கார்த்தியை சந்தித்து என்னிடம் பணம் பெற்று மோசடி செய்தது குறித்து கேட்ட போது, ஒரு மாத காலத்தில் தான் வாங்கிய பணத்தை திரும்ப தந்துவிடுவதாக தெரிவித்தார். ஆனால் அவர் கூறியபடி பணத்தை திரும்ப தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்குப்பதிவு
மனுவை விசாரித்த கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் பேரில், போலி வக்கீல் கார்த்தி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே போலீசாருக்கு பயந்து கார்த்தி தற்கொலைக்கு முயன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விரைவில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த உள்ளனர்.
Related Tags :
Next Story