பருத்தி பயிரில் மகசூல் இழப்பை தடுக்கும் வழிமுறைகள் வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்
பருத்தி பயிரில் மகசூல் இழப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
கொரடாச்சேரி:-
பருத்தி பயிரில் மகசூல் இழப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
பூச்சி தாக்குதல்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் பரவலாக பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதல் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் பருத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து கொரடாச்சேரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் வெளியிட்டுள் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகசூல் இழப்பு
பருத்தியில் அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சி, வெள்ளை ஈ மற்றும் மாவுப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவை அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்வதால் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும்.
அவ்வாறு தவறும் பட்சத்தில் மிகுந்த அளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்திவிடும். அதே சமயம், சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஆரம்ப கட்டத்திலேயே ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினால் பூச்சிகளிடத்தில் எதிர்ப்பு சக்தி உருவாகி மேலும் சேதங்களை ஏற்படுத்த வழிவகுக்கும்.
பூச்சிக்கொல்லிகள்
ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை கடைசி முயற்சியாக மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்த பல்வேறு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை கடைபிடிக்க வேண்டும். முதலில், பருத்தி வயலின் வரப்புகளில் ஆமணக்கு, சூரிய காந்தி, செவ்வந்தி ஆகிய பூத்தாவரங்களை பயிரிடுவதால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து அதன் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
வயலில் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய விளக்குப்பொறியினை ஏக்கருக்கு 2 வீதம் அமைப்பதன் மூலம் பூச்சியினை கட்டுப்படுத்தலாம்.
வேப்ப எண்ணெய்
மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் 2 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் என்ற அளவில் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தாக்குதலின் அளவை பொருத்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறாக ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை தவிர்த்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்த்து கொள்ள முடியும். இந்த வழிமுறைகள் சுற்றுச்சூழலையும் பாதிக்காது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story