கடலூர் பெரியார் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு
கடலூர் பெரியார் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்து முடிந்தது. அதன்பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் 4 வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அதாவது கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியிலும், நெய்வேலி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கொளஞ்சியப்பர் கல்லூரியிலும், புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான சி.முட்லூர் அரசு கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்த 4 மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பெட்டிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுவதையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள போலீசார், அலுவலர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
ஆய்வின்போது கடலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான ஜெகதீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, கடலூர் தாசில்தார் பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story