கோவையில் பரபரப்பு: கொரோனா பரிசோதனைக்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல் - செல்போனை பறித்த மகளிர் விடுதி உரிமையாளர் மீது வழக்கு
கொரோனா பரிசோதனை செய்ய சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி செல்போனை பறித்த மகளிர் விடுதி உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கணபதி,
கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. இதனால் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி 52-வது வார்டு காந்திபுரம் 100 அடி ரோடு 3-வது வீதியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் நேற்று காலையில் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இதற்காக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.
அப்போது அங்கு செயல்பட்டு வரும் தனியார் மகளிர் விடுதிக்கு மாநகராட்சி ஊழியர்கள் சென்றனர். அவர்கள், அங்கிருந்தவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு அங்கிருந்த சிலர் சம்மததித்து உள்ளனர்.
இதற்கிடையே அங்கு வந்த விடுதி உரிமையாளர், மாநகராட்சி ஊழியர்களிடம் இங்கு யாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யக் கூடாது என ஆவேசமாக கூறினார். மேலும், அவர் மாநகராட்சி ஊழியர் ஒருவரின் செல்போனை பறித்து கீழே வீசி எறிந்தார். அதைத்தொடர்ந்து அவர், அங்கிருந்த பூந்தொட்டியை எடுத்து மாநகராட்சி ஊழியர்கள் மீது வீசி தாக்குதல் நடத்த முயன்றார். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்தவர்கள், நாங்கள் நன்றாக தான் இருக்கிறோம். நீங்கள் வர வேண்டாம் என்று மாநகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்தனர். விடுதி உரிமையாளர் தாக்குதல் நடத்த முயன்றது குறித்து ரத்தினபுரி போலீஸ்நிலையத்தில் மத்திய மண்டல சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் புகார் அளித்தார். அதன்பேரில் மகளிர் விடுதி உரிமையாளர் வாசகன் (வயது50) மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
100 அடி ரோடு 3-வது வீதியில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே அங்கு முகாம் போடப்பட்டது. அங்குள்ள தனியார் விடுதியில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினோம். அப்போது, ஆவேசமடைந்த விடுதி உரிமையாளர் எங்கள் மீது அங்கிருந்த கற்கள், பூந்தொட்டியை தூக்கி வீசி தாக்கினார். இதனால், அங்கிருந்து வந்து விட்டோம். சம்மந்தப்பட்ட நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story