திருக்கோவிலூர் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்திய 5 பேர் கைது 2 கார்கள், 10 பவுன் நகை பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கார்கள், 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம்,
சென்னை வடபழனி பகுதியில் வசித்து வருபவர் சிவன் (வயது 47). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவர் கடந்த 18-ந் தேதி மதியம் தொழில் ரீதியாக தனது நண்பர்களான சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த சம்பத் (41), வில்லிவாக்கம் ராஜேஷ்கண்ணா(45), தெலுங்கானா மாநிலம் மந்திரியால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரா (43) ஆகியோருடன் ஒரு காரில் விழுப்புரம் வந்தார்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ் (42) என்பவரை சந்தித்த பின்னர் சிவன், வெங்கடேஷ் உள்பட 5 பேரும் விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்டுள்ளனர். அங்கு அவர்களை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பசும்பொன் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரான நாகராஜ் (53) மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சந்தித்துள்ளனர்.
கடத்தல்
அதன் பிறகு நாகராஜ், நிலம் பார்க்க செல்வதாக கூறி தான் வந்த காரில் சிவனையும், ராஜேந்திராவையும் அழைத்துக்கொண்டு திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் நோக்கி புறப்பட்டார். மழவந்தாங்கல் காட்டுப்பகுதியில் சென்றபோது மற்றொரு காரில் வந்த ஒரு கும்பல், நாகராஜ் காரை மடக்கி அந்த காரில் இருந்த சிவன், ராஜேந்திரா ஆகிய இருவரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி தங்கள் காரில் கடத்தி சென்றுவிட்டனர்.
பின்னர் சேலத்தை அடுத்த தலைவாசல் சுங்கச்சாவடி அருகில் ராஜேந்திராவை மட்டும் காரில் இருந்து இறக்கி விட்டுச்சென்றனர். ஆனால் சிவனை பற்றி எந்தவொரு தகவலும் தெரியாததால் அவர் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் உத்தரவின்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
செல்போன் எண் மூலம் கண்காணிப்பு
தனிப்படை போலீசார் சிவனின் செல்போன் எண் மற்றும் நாகராஜின் செல்போன் எண் டவர் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை சைபர் கிரைம் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தியதோடு கடத்தல் கும்பலை பிடிக்க திருப்பூர், தாராபுரம், சேலம், கரூர், அரவக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனிடையே கடத்தல் கும்பல், ஈரோட்டை அடுத்த காங்கேயம் அருகே உள்ள முத்தூரில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, அங்கிருந்த சென்னை திருநின்றவூரை அடுத்த நாச்சியார்சத்திரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (32), காங்கேயத்தை அடுத்த முத்தூர் புதுப்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்கிற ஓட்டகாது செந்திலின் மனைவி சத்தியா (34) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்களுக்கு சிவன் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
5 பேர் கைது
கார்த்திகேயன் கொடுத்த தகவலின்பேரில் இந்த கடத்தலில் தொடர்புடைய நாகராஜ், செந்தில் (47), சென்னை திருநின்றவூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த செந்தில்நாதன் (42) ஆகிய 3 பேரையும் தாராபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மடக்கிப்பிடித்து கைது செய்து சிவனை மீட்டனர். பின்னர் பிடிபட்ட 5 பேரையும் போலீசார், விழுப்புரம் அழைத்து வந்து அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவனை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து நாகராஜ், செந்தில், செந்தில்நாதன், கார்த்திகேயன், சத்யா ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கார்கள், 10 பவுன் நகைகள், ஒரு செல்போன், துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 5 பேரையும் திருக்கோவிலூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் கைதான செந்தில் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடத்தல் மற்றும் வழிப்பறி வழக்குகள் என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினரை டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.
இரிடியம் விற்பனை
ரியல் எஸ்டேட் உரிமையாளர் சிவனுக்கு சொந்த ஊர் கேரளா மாநிலம் ஆலப்புழா ஆகும். இவர் சென்னை வடபழனியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து சாலி கிராமத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு தெரிந்த சிலரிடம் இரிடியம் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
அதுபோல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜை சந்தித்த சிவன், தான் இரிடியம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்கு நாகராஜிடம் இருந்து சிவன் ரூ.6 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் இதுநாள் வரை நாகராஜிக்கு சிவன் இரிடியத்தை வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பணத்தை திரும்ப கேட்டும் நாகராஜிக்கு அவர் கொடுக்கவில்லை. எனவே நாகராஜ், தான் கொடுத்த பணத்தை சிவனிடம் இருந்து பெறுவதற்காக திட்டமிட்டுள்ளார்.
ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்
அதன்படி சிவனை கடத்திக்கொண்டு அவரது குடும்பத்தினர், உறவினர்களிடம் பணத்தை வாங்க முடிவு செய்து தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது. மேலும் சிவனை விடுவிக்க வேண்டுமானால் ரூ.25 லட்சம் தர வேண்டும் என்று அவரது உறவினர்கள், நண்பர்களிடம் நாகராஜ் தரப்பினர் செல்போனில் பேசியதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி பொம்மை துப்பாக்கி என்பதும் தெரியவந்தது.
Related Tags :
Next Story