மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 April 2021 6:36 PM GMT (Updated: 21 April 2021 6:36 PM GMT)

ராமநாதபுரத்தில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர் திருட்டு

ராமநாதபுரம் நகரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திருடு போய் வந்தது. இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த திருட்டை கண்டுபிடிக்க ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி திருட்டு கும்பலை கண்டுபிடித்தனர். "

3 பேர் கைது

இதில் ராமநாதபுரம் லட்சுமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் இரவு நேரங்களில் வீடுகளின் முன்பு தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது. இந்த வாகனங்களை பழைய இரும்பு வியாபாரி ஒருவரிடம் விற்று பணமாக்கி ஜாலியாக செலவழித்து வந்துள்ளான்.. அந்த சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் புளிக்கார தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் பால்ராஜ் (55) என்பவரது பழைய இரும்பு கடையில் போலீசார் விசாரித்தனர்.
சிறுவன் திருடி விற்கும் 2 சக்கர வாகனங்களை இவர் வாங்கி, அதன் உதிரி பாகங்களை தனியாக பிரித்தெடுத்து நல்ல விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. இதன்படி அவரையும் விற்பனைக்கு உடந்தையாக இருந்த கடையில் வேலை பார்த்த புளிக்காரதெருவை சேர்ந்த பாண்டி (28) ஆகியோரை போலீசார் பிடித்து கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர். சிறுவன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறுவனிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள், பால்ராஜ், பாண்டி ஆகியோரிடமிருந்து விற்பதற்கு பிரித்து வைத்திருந்த திருட்டு இரு சக்கர வாகனத்தின் உதிரி பாகங்கள் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.

Next Story