வேட்பாளர்கள், முகவர்களுக்கு 2 நாட்கள் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் வருகிற 29, 30 தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி, கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,ஏப்.
விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் வருகிற 29, 30 தேதிகளில் நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி, கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்க்கண்ட விவரப்படி வாக்கு எண்ணிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்ைட, திருச்சுழி ஆகிய 7 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் போடப்படுகின்றன. இதில் தபால் வாக்குகளுக்கு ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய தொகுதிகளுக்கு 4 மேஜைகளும், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி ஆகிய தொகுதிகளுக்கு தபால் வாக்குகளுக்காக 5 மேஜைகளும் போடப்படும்.
ராஜபாளையம் தொகுதிக்கு 25 சுற்றுகளாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் ஆகிய தொகுதிகளுக்கு 26 சுற்றுகளாகவும், சிவகாசி தொகுதிக்கு 27 சுற்றுகளாகவும், விருதுநகர் தொகுதிக்கு 24 சுற்றுகளாகவும், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளுக்கு 23 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முகவர்கள் எண்ணிக்கை
ஒவ்வொரு வேட்பாளருக்கும் அனுமதிக்கப்படும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் விவரம் வருமாறு:
அதன்படி ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய தொகுதிகளுக்கு 19 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி ஆகிய தொகுதிகளுக்கு 20 பேரும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருகை தரும் வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பென்சில், பந்துமுனை பேனா, வெள்ளை காகித தாள், 17சி படிவ நகல், அழிரப்பர் ஆகியவற்றை மட்டும் எடுத்து வர வேண்டும்.
மேலும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான மருத்துவ சான்றினை உடன் கொண்டு வர வேண்டும். வாக்கு எண்ணிக்கை முகவர்களாக தேர்வு செய்யப்பட்ட யாருக்கேனும் கொரோனா தொற்று இருப்பின் வாக்கு எண்ணிக்கைக்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக மாற்று முகவர்களை தேர்வு செய்து அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அடையாள அட்டைகள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு மருத்துவ முகாம்கள்
அதன் பொருட்டு மாவட்ட மற்றும் அந்தந்த வட்டார தலைமையகங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் வருகிற 29-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இலவச கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் வாக்கு எண்ணிக்கை அறைகளுக்கு வெளியே அகன்ற திரை தொலைக்காட்சி வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story