சொத்து தகராறில் பெண் வெட்டிக்கொலை; மகன்-மருமகள் கைது
கல்லக்குடி அருகே சொத்து தகராறில் பெற்ற தாயை வெட்டிக்கொலை செய்த மகன் மற்றும் மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லக்குடி,
கல்லக்குடி அருகே சொத்து தகராறில் பெற்ற தாயை வெட்டிக்கொலை செய்த மகன் மற்றும் மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சொத்து தகராறு
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 56). இவர்களின் மகன்கள் தர்மராஜ்(36), ரகுநாத்(34). மகள் விசாலாட்சி(31). 3 பேரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். சரஸ்வதி தனது சொத்தில் 2 மகன்களுக்கும் தலா ஒரு வீட்டை எழுதி கொடுத்து விட்டு, மற்றொரு வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக தர்மராஜ், தனது மனைவி மாரியாயியுடன்(30), தனது தாய் வீட்டுக்கு சென்று, அவர் குடியிருக்கும் வீட்டையும் தனது பெயருக்கு எழுதி கொடுக்கும் படி பிரச்சினை செய்து வந்ததாக தெரிகிறது. ஆனால் 2 மகன்களுக்கும் தலா ஒரு வீட்டை எழுதி கொடுத்து விட்டேன். நான் இறந்த பிறகு இந்த வீட்டை பங்கு வைத்து கொள்ளுங்கள். உனக்கு மட்டும் எழுதி கொடுக்க முடியாது என்று சரஸ்வதி கூறி வந்துள்ளார்.
வெட்டிக்கொலை
அப்போது, தனது மாமனாருடன், அங்கு வந்த விசாலாட்சி, தனது அண்ணனிடம், ‘ஏன் தேவையில்லாமல், தினமும் வந்து அம்மாவிடம் தகராறு செய்கிறாய்?’ என்று கேட்டுள்ளார். ஆனால் தர்மராஜ் கேட்காமல் தனது தங்கைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன், உன்னை கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
அப்போது, தர்மராஜ் மனைவி மாரியாயி, உனது தாய் உயிருடன் இருக்கும் வரை நமக்கு வீடு தரமாட்டார். அவரை வெட்டி கொல்லுங்கள் என்று தனது கணவனை தூண்டி விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தர்மராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது தாயை சரமாரியாக வெட்டினார். பின்னர், தனது மனைவியுடன், அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சரஸ்வதியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
மகன்-மருமகள் கைது
இதுபற்றி தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் சரஸ்வதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தர்மராஜையும், அவருடைய மனைவி மாரியாயியையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட தர்மராஜ் கடந்த 2007-ம் ஆண்டு தனது சித்தப்பா சிவசாமியை கொலை செய்த வழக்கில் 5 வருடம் சிறை தண்டனை அனுபவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story